×

எல்கார் பரிஷத் வழக்கில் கைதான சமூக ஆர்வலர் ஸ்டான் ஸ்வாமி மரணம்

மும்பை: கொரோனா பாதிப்பு மற்றும் பல்வேறு உடல் கோளாறுகளால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்டான் ஸ்வாமி, நேற்று மதியம் இறந்தார். அவருக்கு வயது 84. ஜார்க்கண்ட் மாநில பழங்குடியினருக்காக குரல் கொடுத்தவர் ஸ்டான் ஸ்வாமி. திருச்சியை பூர்வீகமாக கொண்ட இவர், ராஞ்சியில் ஆதிவாசி மற்றும் பழங்குடியின மக்களுக்கு சேவை செய்து வந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடைய எல்கார் பரிஷத் வழக்கில் சமூக செயற்பாட்டாளர் ஸ்டான் ஸ்வாமி உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, மும்பை டலோஜா சிறையில் அடைக்கப்பட்டார். பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட இவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு, இவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக் கோரி, ஸ்டான் ஸ்வாமி சார்பில் மும்பை உயர் நீதிமன்ற விடுமுறைக்கால அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது இதை பிறகு முடிவு செய்யலாம் என கூறிய நீதிபதிகள், அவரை அரசு ஜெஜெ மருத்துவமனையில் சேர்க்க பரிந்துரைத்தனர். ஆனால், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற ஸ்டான் ஸ்வாமி ஒப்புக் கொள்ளவில்லை. வீடியோ கான்பரன்சிங் முறையில் நடந்த விசாரணையில் ஆஜரான ஸ்வாமி, அரசு மருத்துவமனையில் 2 முறை சேர்க்கப்பட்டும் பிரச்னை தீர்ந்தபாடில்லை. எனவே, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதை விட சிறையிலேயே இறந்து விடலாம் என வேதனையுடன் கூறினார்.

இதையடுத்து, ஸ்டான் ஸ்வாமியின் விருப்பப்படி பாந்த்ராவில் உள்ள ஹோலி பேமிலி மருத்துவமனையில் 15 நாட்களுக்கு சிகிச்சை வழங்க நீதிமன்றம் அனுமதித்தது. இதன்படி கடந்த 28ம் தேதி ஹோலி பேமிலி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், மருத்துவமனையில் ஸ்வாமி சிகிச்சை பெறுவதற்கான கால அளவை 18ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதற்கிடையே, அவரது உடல் நிலை குறித்து கடந்த 17ம் தேதி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்தது. அதில், ஸ்டான் ஸ்வாமி கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருவதாக குறிப்பிட்டிருந்தாலும், அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால், ஐசியுவில் சேர்த்து சிகிச்சை அளிக்க கோரப்பட்டது. இதன்படி ஜூலை 5ம் தேதி வரை சிகிச்சை பெற கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.

நேற்று வரை சிகிச்சை பெற அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஸ்டான் சுவாமி நேற்று மதியம் இறந்தார். இதனை, அவர் சிகிச்சை பெற்ற ஹோலி பேமிலி மருத்துவமனை நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த தகவலை மும்பை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.எஸ்.ஷிண்டே மற்றும் என்.ஜெ.ஜமாதர் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு ஹோலி பேமிலி மருத்துவமனை இயக்குநர் டாக்டர் லான் டிசோசா பதிவு செய்தார். கவலைக்கிடமான நிலையில் வென்டிலேட்டர் உதவியடன் சிகிச்சை பெற்று வந்த ஸ்டான் ஸ்வாமிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பு ஏற்பட்டது.

தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி திங்கட் கிழமை (நேற்று) மதியம் 1.30 மணிக்கு இறந்தார். கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட உடல் நல பாதிப்புகள் மற்றும் நுரையீரல் தொற்று, பார்க்சின்சன் நோய் ஆகியவையே அவரது மரணத்துக்கு காரணமாக அமைந்து விட்டது என்றார். ஸ்டான் ஸ்வாமி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மிகிர் தேசாய், டலோஜா சிறையில் இருந்தபோது ஸ்டான் ஸ்வாமிக்கு உரிய நேரத்தில் உடனடி மருத்துவ சிகிச்சை வழங்க சிறை நிர்வாகம் தவறி விட்டது. சிறை நிர்வாகத்தின் அலட்சியமே அவரது உயிரிழப்புக்கு காரணம் என குற்றம் சாட்டினார்.

மு.க..ஸ்டாலின், ராகுல் இரங்கல்

‘பழங்குடியின மக்களின் உரிமைப் போராளியும் மனிதவுரிமைச் செயற்பாட்டாளருமான ஸ்டான் ஸ்வாமி மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன். ஆழ்ந்த இரங்கல் அடித்தட்டு மக்களுக்காகப் போராடிய அவருக்கு நேர்ந்த துயரம் இனி எவருக்கும் நிகழக் கூடாது’ என ஸ்டான் ஸ்வாமி மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர், கே. பாலகிருஷ்ணன், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பதிவில், ‘ஸ்டான் ஸ்வாமி காலமான செய்தியை கேட்டு மனம் வருந்தினேன். ஆழ்ந்த இரங்கல். நீதியை நிலைநாட்டி, மனிதாபிமானத்தை கடைப்பிடித்தார்’ என கூறி உள்ளார்.

Tags : Stan Swamy ,Elgar Parishad , Social activist, Stan Swamy, death
× RELATED போராளிகள் விதைக்கப்படுகிறார்கள்...