×

உலகத்தை ஒரே குடும்பமாக கருதுவது இந்திய நாகரிகம்: கோவின் குளோபல் என்ற உலகளாவிய மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதம்..!

டெல்லி: இந்திய நாகரிகம் உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாக கருதுகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் தொடங்கப்பட்ட கோவின் இணையதளம் கொரோனா தகவல்கள், பரவல் கண்காணிப்பு, சிகிச்சை, தடுப்பூசி இயக்கம் போன்ற பல்வேறு விஷயங்களுக்கான தளமாக விளங்கி வருகிறது.கனடா, மெக்ஸிகோ, நைஜீரியா, பனாமா மற்றும் உகாண்டா உள்ளிட்ட சுமார் 50 நாடுகள் கோவின் இணையதளத்தை கொரோனா தொடர்பான பதிவுகளுக்கான பொதுத்தளமாக பயன்படுத்திக் கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றன.

இந்நிலையில் இந்த தளத்தின் பயன்பாட்டை உலக நாடுகளுக்கு வழங்கத் தயாராக இருப்பதாக பிரதமர் மோடி அறிவித்தார். கோவின் குளோபல் என்ற உலகளாவிய மாநாட்டில் காணொலி வழியாக உரையாற்றிய பிரதமர் மோடி; இந்திய நாகரிகம் உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாக கருதுகிறது. இத்தத்துவத்தின் அடிப்படை உண்மையை கொரோனா தொற்று பலருக்கு உணர்த்தியுள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் கொரோனாவுக்கு இணையாக தொற்று எதுவும் இல்லை. ஒரு நாடு எவ்வளவு சக்திவாய்ந்ததாக இருந்தாலும் இது போன்ற ஒரு சவாலை தனியாக தீர்க்க முடியாது.

கொரோனா தடுப்பூசி முன்பதிவுக்கான கோவின் தொழில்நுட்பத்தை பிற நாடுகளுக்கு வழங்க தயார். தடுப்பூசி வழங்குவதை திட்டமிடும் போது இந்தியாவில் டிஜிட்டல் அணுகுமுறையை பின்பற்ற முடிவு செய்யப்பட்டது. தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்தே, இந்த போரில் உலகளாவிய சமூகத்துடன் நமது அனுபவங்கள், நிபுணத்துவம் மற்றும் வளங்கள் அனைத்தையும் பகிர்ந்து கொள்ள இந்தியா உறுதிபூண்டுள்ளது. கொரோனாவுக்கு எதிரான எங்கள் போராட்டம் தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைந்ததாகும் என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்; ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம் என்ற தத்துவத்தின் அடிப்படை உண்மையை பலருக்கு உணர்த்தியுள்ளது. பெருந்தொற்றிலிருந்து வெற்றிகரமாக மீண்டுவர மனித குலத்திற்கு சிறந்த நம்பிக்கையாக விளங்குவது தடுப்பூசியே எனவும் கூறினார்.


Tags : Modi ,Global Conference of Goa , Considering the world as one family, Indian civilization: Prime Minister Modi is proud at the Govind Global Conference ..!
× RELATED பிரதமர் மோடியின் பேச்சுக்காக...