இந்தியாவின் ‘கோவாக்சின்’ தடுப்பூசி விவகாரம்: பிரேசில் அதிபரிடம் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் ஒப்புதல்

ரியோ டி ஜெனிரோ: இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசி கொள்முதல் விவகாரத்தில் பிரேசில் அதிபரிடம் விசாரணை நடத்த அந்நாட்டு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கொரோனா தீவிரம் அதிகமாக உள்ளதால் இதுவரை ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் பிரேசில் உள்ளது. வைரஸ் பரவலை தடுக்க அதிபர் சரியான நடவடிக்கை எடுக்காததால் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், தடுப்பூசி திட்டத்தையும் தீவிரப்படுத்தாததால், அந்நாட்டு அதிபர்  ஜெய்ர் போல்சனாரோவுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. மேலும், அவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. இந்தியாவின் ‘பாரத் பயோடெக்’ நிறுவனம் தயாரிக்கும் ‘கோவாக்சின்’ தடுப்பூசியை கொள்முதல் செய்ய, அந்த நிறுவனத்துடன் பிரேசில் அரசு ஒப்பந்தம் செய்தது. இதில் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.

அதையடுத்து, தடுப்பூசி ஊழலில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க, அந்த நாட்டின் உச்ச நீதிமன்ற நீதிபதி ரோசா வெபர் ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளார். முன்னதாக நாடு முழுவதும் 40க்கும் மேற்பட்ட நகரங்களில் லட்சக்கணக்கான மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில், உச்சநீதிமன்றம் இந்த அனுமதியை அளித்துள்ளது. இதுகுறித்து சுகாதார அமைச்சக இறக்குமதி துறையின் தலைவர் லூயிஸ் ரிக்கார்டோ மிராண்டா கூறுகையில், ‘இந்திய மருந்து நிறுவனமான பாரத் பயோடெக்கிலிருந்து 20 மில்லியன் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டது.

இதற்கான ஒப்புதலில் கையெழுத்திட தேவையற்ற அழுத்தம் கொடுக்கப்பட்டது. பிரேசில் சட்டத்தின்படி, இது மன்னிக்க முடியாத குற்றமாகும். இதேபோல், சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் இருந்து 45 மில்லியன் டாலர் அளவிற்கான தடுப்பூசி கொள்முதலிலும் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ளது’ என்றார்.

பிரேசிலும், பிரான்சும்...

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கும், இந்திய பிரதமர் மோடிக்கும் அரசியல் ரீதியாக நட்பு உள்ளது. அதனால், கோவாக்சின் விஷயத்தில் இந்தியாவில் தயாரித்த கோவாக்சினை கொள்முதல் செய்ய பிரேசில் அதிபர் முடிவு எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த விவகாரம் பிரேசிலில் ஊழல் பிரச்னையாக மாறியுள்ளது. மற்றொரு விஷயமாக, பிரான்சிடம் இருந்து ரபேல் போர் விமானங்களை இந்தியா கொள்முதல் செய்த விஷயத்தில் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதனால், ரபேல் போர் விமான கொள்முதல் குறித்து நீதி விசாரணை நடத்த அந்நாட்டு நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இவ்வாறாக பிரேசில், பிரான்ஸ் நாடுகளின் நீதிமன்றங்கள் இந்தியா தொடர்பான வர்த்தக விசயத்தில் முக்கியமான உத்தரவுகளை பிறப்பித்துள்ளன. மேற்கண்ட இரு நாடுகளின் விவகாரங்கள், இந்திய அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

Related Stories:

>