×

கும்மிடிப்பூண்டியில் குடிபோதையில் அடிதடி; பிரபல ரவுடிக்கு சரமாரி வெட்டு: மருத்துவமனையில் உயிருக்கு போராட்டம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் குடிபோதையில் நண்பர்கள் இடையே நடந்த சண்டையில் பிரபல ரவுடிக்கு சரமாரி வெட்டு விழுந்தது. ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்ைச அளிக்கப்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி, பாலிஸ்வரன் கண்டிகையை சேர்ந்தவர் பாஸ்கர் என்ற டிஸ்க் பாஸ்கரன் (34). இவர் மீது கொலை, கொள்ளை மற்றும் வழிப்பறி வழக்குகள், ஆள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் பல காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இரண்டு முறை குண்டர் சட்டத்தில் டிஸ்க் பாஸ்கரன் அடைக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு கும்மிடிப்பூண்டி பஜார் காந்தி நகர் பகுதியை சேர்ந்த ஜெகன்  (27), கார்த்திக் (28) மற்றும் சிந்தலகுப்பம் பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார்(31) ஆகியோருடன் பாஸ்கரன் மதுஅருந்தியுள்ளார். விடிய, விடிய அங்கேயே அமர்ந்து மது குடித்ததால் திடீரென அவர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது நண்பர்கள் அனைவரும் சேர்ந்துகொண்டு டிஸ்க் பாஸ்கரனை பார்த்து, ‘’நீ என்ன பெரிய ரவுடியா, எங்களை ஒன்றும் செய்யமுடியாது’ என்று கேட்டுள்ளனர்.

இதன்காரணமாக அவர்கள் இடையே முற்றிய வாக்குவாதம் அடிதடியில் முடிந்தது. திடீரென அவர்கள், தாங்கள் வைத்திருந்த அரிவாளால் டிஸ்க் பாஸ்கரனின் தலை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளனர். ரத்தவெள்ளத்தில் விழுந்த அவர் துடித்தது பார்த்ததும் இறந்துவிட்டார் என்று நினைத்து தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் சிப்காட் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த டிஸ்க் பாஸ்கரனை மீட்டு உடனடியாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், ஜெகன், கார்த்திக், பிரேம்குமார், ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில், பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளதாக தெரிகிறது. மேலும் அவர்கள் கொடுத்த தகவல்படி, சிலரை தேடி வருகின்றனர்.

Tags : Gummidipoondi , Drunken beating in Gummidipoondi; Bullet cut for famous rowdy: Fight for life in hospital
× RELATED சிப்காட்டிற்கு இடம் ஒதுக்கியதை...