×

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சைக்கிள் ஓட்டி தனது எதிர்ப்பை பதிவு செய்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்..!!

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பிரேமலதா விஜயகாந்த் சைக்கிள் ஓட்டி தனது எதிர்ப்பை பதிவு செய்தார். நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.  தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் ரூ.100 கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் விண்ணை முட்டுமளவுக்கு உயர்ந்துள்ளன. ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் அன்றாட வாழ்க்கையை நகர்த்துவதே பெரும்பாடாக இருக்கிறது. இதை தொடர்ந்து விலை ஏற்றத்தை கண்டித்து மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல அரசியல் கட்சி தலைவர்கள் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், எகிறும் விலைவாசி உயர்வை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் ரூ.100 கடந்து விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா பங்கேற்றார். பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. முன்னதாக போராட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த பிரேமலதா மிதிவண்டியில் சென்று எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக கண்டனத்தை பதிவு செய்தார்.


Tags : Temujin Treasurer ,Premalatha Vijayakand , Petrol, Diesel Prices, Bicycles, Temujin Treasurer Premalatha Vijayakand
× RELATED அனல் பறக்கும் தமிழக தேர்தல் களம்: நாளை...