தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் கோயில்களின் சொத்துக்களை மீட்பதில் முதல்வர் சிறப்பாக செயல்படுகிறார்: இந்து மகா சபா மாநில தலைவர் பாராட்டு

நாகர்கோவில்: தமிழகத்தில் அறநிலையத்துறையில் இந்துக்களுக்கே பணி வழங்க வேண்டும். அறநிலையத்துறைக்கு சொந்தமான சொத்துகளை முழுமையாக மீட்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்து மகா சபா சார்பில் நேற்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  நாகர்கோவில் பீச் ரோடு சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தை இந்து மகா சபா மாநில தலைவர் தா.பாலசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது : தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு, அறநிலையத்துறைக்கு சொந்தமான சொத்துக்களை மீட்பதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை இல்லாத வகையில் தினமும் பல கோடி ரூபாய் சொத்துக்கள் மீட்கப்பட்டு உள்ளதாக வரும் செய்திகள் மகிழ்ச்சியை தருகிறது.

நீண்ட காலத்துக்கு பின், அறநிலையத்துறைக்கு சிறப்பான ஓர் அமைச்சர் கிடைத்திருக்கிறார். சேகர்பாபுவுக்கு அறநிலையத்துறை வழங்கியதுடன், ஆக்கிரமிப்பு சொத்துக்களை மீட்க உத்தரவிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நாங்கள் நன்றி கூறி கொள்கிறோம். அறநிலையத்துறை நிலம் இனிமேல் யாருக்கும் பட்டா வழங்கப்படாது என அமைச்சர் சேகர்பாபு கூறி உள்ளார். இதை வரவேற்பதுடன், தற்போது போடப்பட்டுள்ள பட்டாக்களையும் ரத்து செய்து, அந்த நிலத்ைத மீட்க வேண்டும். கோயில்களின் வளர்ச்சிக்காக சொத்துக்களை பயன்படுத்த வேண்டும். அறநிலையத்துறையில் பிற மதத்தினருக்கு பணிகள் வழங்க கூடாது. அறநிலையத்துறை சொத்துக்கள் மீட்பதில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து சிறப்பாக இயங்கும் என நம்புகிறோம் என்றார்.

Related Stories:

>