×

மது கடத்தி வந்த வாகனத்தை விடுவிக்க கூகுள் பே மூலம் லஞ்சம் எஸ்எஸ்ஐ, ஏட்டு மாற்றம்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், கர்நாடக மாநில எல்லையாக உள்ள ஆசனூரில் மதுவிலக்கு போலீசாரின் சோதனைச்சாவடி உள்ளது. இங்கு,  கர்நாடக மாநிலத்தில் இருந்து வாகனங்களில் மது கடத்தி வருபவர்கள் மீது  நடவடிக்கை எடுத்து மதுபாட்டில்களையும், வாகனங்களையும் போலீசார் பறிமுதல்  செய்வது வழக்கம். இந்நிலையில், கடந்த 2ம் தேதி கர்நாடக மதுபாட்டில்களை  கடத்திய கார் ஒன்று ஆசனூர் சோதனைச்சாவடிக்கு வந்தது. அப்போது, அந்த காரில்  இருந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆனால், காரை பறிமுதல் செய்யாமல்  சம்பந்தப்பட்ட நபரிடம் போலீசார் கூகுள் பே மூலம் பணத்தை லஞ்சமாக  பெற்றுக்கொண்டு விடுவித்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக  எழுந்த புகாரின்பேரில், ஆசனூர் சோதனைச்சாவடியில் கடந்த 2ம் தேதி பணியாற்றிய  போலீ்ஸ் எஸ்எஸ்ஐ வடிவேல், ஏட்டு சந்திரமோகன் ஆகியோரை ஈரோடு  மாவட்ட ஆயுதப்படைக்கு பணியிடம் மாற்றம் செய்து ஈரோடு எஸ்பி சசி மோகன்  உத்தரவிட்டார். இது குறித்து எஸ்பி சசி மோகன் கூறுகையில், `ஆசனூர்  சோதனைச்சாவடி குறித்த எழுந்த புகாரின்பேரில், 2 பேர் ஆயுதப்படைக்கு பணியிடம்  மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விசாரணை முடிவில், புகார் உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது  துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Tags : SSI , Alcohol smuggling, Google Pay, bribery, SSI, record
× RELATED தேர்தல் பணியில் ஈடுபட்ட எஸ்எஸ்ஐ,...