×

நாகர்கோவில் மாநகராட்சியில் அதிமுக ஆட்சியில் நடந்த அவசரகால பணிகளில் கோடிக்கணக்கில் முறைகேடு: விசாரணை வளையத்தில் அதிகாரிகள்

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சியில் 52 வார்டுகள் உள்ளன. கடந்த அதிமுக ஆட்சியின் போது மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. ஆனால் அதற்கான எந்த வளர்ச்சி பணியும் நடைபெறவில்லை. மாநகராட்சியாக அறிவிப்பு வரும் சமயத்தில் ஆணையராக இருந்தவர் சரவணக்குமார். இவர் நகராட்சி கமிஷனராக பொறுப்புக்கு வந்து சுமார் ஒன்றரை ஆண்டில், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக மாநகராட்சி பணிகளில் வெளி மாவட்ட காண்ட்ராக்டர்களின் ஆதிக்கம் அதிகரித்தது. வெளி மாவட்டத்தில் இருந்து வந்து, டெண்டர் எடுத்து வேலைகளை செய்ய தொடங்கினர். குமரி மாவட்டத்தை சேர்ந்த  காண்ட்ராக்டர்கள் பணிகளை முடித்தால், அவர்களுக்கு சரிவர பணம் பட்டுவாடா செய்யப்படாத நிலையும் இருந்தது. இன்னும் சில காண்ட்ராக்டர்களுக்கு, லட்சக்கணக்கில் மாநகராட்சி பாக்கி வைத்துள்ளது.

இந்த பிரச்னை ஒருபுறமிருக்க தற்போது மாநகராட்சியில் நடந்த பல்வேறு பணிகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. அலங்கார தரை கற்கள் பதிப்பு தொடர்பான முறைகேடு புகாரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் நகராட்சியாக இருந்த சமயத்தில் பணியில் இருந்த சில பொறியாளர்களின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன. அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக நாகர்கோவில் மாநகராட்சியில் முடிக்கப்பட்ட பல்வேறு பணிகள் அவசர கால பணிகளாக (பிரிவு 15 ன் படி) முடிக்கப்பட்டுள்ளது. புயல், மழை வெள்ளம், தொற்று பரவல், பிரதமர், முதல்வர் போன்ற முக்கிய தலைவர்கள் வருகை உள்ளிட்ட நேரங்களில் தான் பிரிவு 15ன் படி அவசர கால பணிகளாக சாலை சீரமைப்பு, கட்டிடங்கள் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் நடக்கும். அவசர கால பணியாக வைக்கும் போது மாநகராட்சி, அரசு பதிவு பெற்ற காண்ட்ராக்டர் ஒருவரை அழைத்து அவரை பணி செய்ய கூறி பின், தீர்மான நகலில் சேர்த்து அதற்கான பணத்தை கொடுப்பார்கள்.

இவ்வாறு அவசர கால பணிகளை அவை கூட்டத்தில்  கூட கேள்வி எழுப்ப மாட்டார்கள். உடனடியாக அந்த தீர்மானம் பாஸ் ஆகி விடும். தணிக்கையின் போதும் இதற்கு கேள்வி வராது. ஆனால் நாகர்கோவில் மாநகராட்சியில் 80 சதவீத பணிகள் அவசர கால பணிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. சாதாரண சாலை பணிகளை கூட, அவசர கால பணிகளாக சேர்த்து முடித்தது ஏன்? இதற்கு காரணம் என்ன? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட சில அதிகாரிகள் அதிகளவில் கமிஷன் பெற்றதாக கூறப்படுகிறது.  இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் ராம் தமிழக முதல்வர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்பி உள்ள மனுவில், நாகர்கோவில் மாநகராட்சியில் கடந்த 4 வருடங்களாக பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. குறிப்பாக பொறியியல் பிரிவில் பிரிவு 15ன் படி பல கோடிக்கான பணிகள் நடைபெற்றதில், முறைகேடுகள் அரங்கேறி உள்ளன.

அவசர காலமில்லாத பணிகள் பலவற்றையும் அவசர கால பட்டியலில் இணைத்து தனக்கு வேண்டப்பட்ட காண்ட்ராக்டர்களுக்கு கொடுத்து அதன் மூலம் சில அதிகாரிகள் லட்சக்கணக்கில் பணம் பார்த்துள்ளனர். வேண்டுமென்றே பல பணிகளை கிடப்பில் போட்டு விட்டு, சில அமைப்புகளை போராட தூண்டி விட்டு அதன் மூலம் அவசர கால பணி பட்டியலில் அந்த பணியை சேர்த்து முடித்துள்ளனர். 3, 4 முறை டெண்டர் விடப்பட்டு தள்ளி போன பணிகளையும் அவசர கால பணிகளாக சேர்த்து முடித்து பணம் பார்த்துள்ளனர். இதே போல் தனியார் பங்களிப்புடன் நடக்கும் பணிகளுக்கு, மாநகராட்சி செலவு கணக்கு காட்டி உள்ளது. இதன் பின்னணியிலும் அதிகாரிகள் உள்ளனர். எனவே இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, மக்கள் வரிப்பணத்தை வீணடித்தவர்களை உடனடியாக தண்டிக்க வேண்டும் என கூறி உள்ளார்.

இதற்கிடையே அவசர கால பணிகளின் பட்டியல் தொடர்பாக மண்டல அலுவலகத்தில் விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளதால், அதிகாரிகள் சிலர் கலக்கத்தில் உள்ளனர். முதல்கட்ட விசாரணை நெல்லையில் நாளை நடக்கிறது.

அவசர கால பணிகளை அவை கூட்டத்தில்  கூட கேள்வி எழுப்ப மாட்டார்கள். உடனடியாக அந்த தீர்மானம் பாஸ் ஆகி விடும். தணிக்கையின் போதும் இதற்கு கேள்வி வராது

Tags : Municipality of Nagargo ,Ring , Nagercoil Corporation, AIADMK regime, abuse, investigation
× RELATED பல கோடி தங்க நகைகள், கிரானைட் கற்கள் பறிமுதல்