×

களைகட்டியது காசிமேடு துறைமுகம் விரும்பிய மீன்கள் கிடைத்ததால் அசைவ பிரியர்கள் உற்சாகம்: டீசல் விலை உயர்வால் மீனவர்கள் வருத்தம்

சென்னை: காசிமேடு மீன் பிடி துறைமுகத்தில் அசைவ பிரியர்கள் விரும்பிய மீன்கள் தாராளமாக கிடைத்தது. அவர்கள் உற்சாகமாக அதை வாங்கிச் சென்றனர். ஆனால், வரத்து குறைவு மற்றும் டீசல் விலை உயர்வால் வருவாய் உயரவில்லை என்று மீனவர்கள் வேதனைப்பட்டனர்.  சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கொரோனா பரவலை தடுக்க மீன்மார்க்கெட்டில் மொத்த வியாபாரம் ஒரு இடத்திலும், சில்லரை வியாபாரம் வேறு ஒரு பகுதியிலும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஞாயிற்று கிழமை  விடுமுறை நாளான நேற்று மீன்கள் வாங்க ஏராளமான அசைவ பிரியர்கள் காசிமேட்டில் வந்து குவிந்தனர். இதனால், காசிமேடு மீன்மார்க்கெட் நுழைவு பகுதியில், துறைமுக போலீசார் தடுப்புகள் அமைத்து பாஸ் உள்ள வியாபாரிகள் மட்டும் சோதனை செய்து மார்க்கெட்டிற்குள் அனுமதித்தனர்.  காசிமேட்டில் மீன்வாங்க குவிந்த அசைவ பிரியர்கள் அங்கு கிடைத்த வஞ்சரம், சங்கரா, இறால் போன்ற விருப்பப்பபட்ட மீன்களை மகிழ்ச்சியாக வாங்கி சென்றனர்.

இதுகுறித்து கொளத்தூரை சேர்ந்த கார்த்தி என்பவர் கூறிகையில், நாங்கள் எப்போதும் மீன்வாங்க இங்கு வருவோம்.  காசிமேட்டில் அனைத்து மீன்களும் கிடைக்கின்றன. மேலும், மீன்களின் விலையும் கணிசமாக உள்ளது என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.  மேலும், குடும்பத்துடன் மீன் வாங்க வந்தவர்களும் தாங்கள் விரும்பிய மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு மீன்களை வாங்கி செல்கிறோம்  என கூறினர். இந்நிலையில், விரும்பிய மீன்கள் கிடைத்த மகிழ்ச்சியில் மக்கள் இருந்தாலும்,  மீன் வியாபாரிகள்  மிகுந்த வருத்தத்துடன் காணப்பட்டனர். கொரோனா பரவலால் இரண்டு இடங்களில் மீன் வியாபாரம் மாற்றப்பட்டிருப்பதால்  வியாபாரிகள் மிகுந்த சிரமமடைந்து வருவதாகவும். படகில் இருந்து இறக்கப்படும் மீன்களை விற்பனை செய்யும் இடத்திற்கு எடுத்து வருவதே மிகுந்த போராட்டமாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து காசிமேட்டை சேர்ந்த மீன் வியாபாரி ஜெயா கூறியதாவது, மீன்களை படகில் இருந்து எடுத்து கொண்டு விற்பனை செய்யும் இடத்திற்கு வருவதற்குள் பல இடங்களில் தவறி கீழே விழும் நிலைக்கு ஆளாகிறோம். தற்போது, மீன் வியாபாரம் செய்யும் இடத்தில் குடிநீர், கழிப்பிடம் என எந்த வசதியும் செய்து தரப்படவில்லை. மீன்களின் விலை உயர்வால் வருமானமின்றி தவித்து வருகிறோம் என கூறினார். இதுகுறித்து, விசைபடகு மீனவர்கள் சங்க பொதுசெயலாளர் விஜயேஷ் கூறியதாவது, குறைந்த அளவிலான மீன்களே தற்போது கிடைத்துள்ளது. இதில் தும்பிளி, சின்ன சங்கரா, வாலை போன்ற மீன்களே அதிகளவில் வலையில் சிக்கியது.

இவற்றை குறைவான விலையிலேயே கொடுத்துள்ளோம். மக்கள் விரும்பி வாங்கும் வஞ்சரம், சங்கரா போன்ற மீன்கள் வரத்து குறைவால் கிலோ ரூ.1200 க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டது. தற்போது டீசல் விலை உயர்ந்து வருகிறது. இப்படி உயர்ந்தால் எங்களால் லாபத்தை பார்க்க முடியாது.  இந்த, டீசல் விலை உயர்வு மீனவர்களின் வாழ்வாதாரத்தை வெகுவாக பாதித்துள்ளது. இந்த விலை உயர்வை குறைக்க மத்திய, மாநிலஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.



Tags : Kasimeddu harbor , Kasimeddu port, fish, non-vegetarians, diesel prices, fishermen
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...