×

பெருங்குடி, கந்தன்சாவடியில் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதில் மெத்தனம்: சிண்டிகேட் மூலம் அடாவடி கழிவு நீரிலும் காசு பார்த்த அதிமுக விஐபி; தனியாருக்கு பணத்தை லட்சம் லட்சமாக கொடுத்து அவதிப்படும் மக்கள்

சென்னை: வேகமாக வளர்ந்துவரும் பகுதியான பெருங்குடி, கந்தன்சாவடியில் கழிவு நீர் அகற்றும் நிலையத்தை அமைக்காமல், குடியிருப்புகள், வணிக வளாகங்கள், தொழில் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்களிடம் லட்சம் லட்சமாக அதிமுக விஐபி ஒருவர் கொள்ளையடித்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சென்னையில் வளர்ந்து வரும் பகுதியாக விளங்குவது பழைய மாமல்லபுரம் சாலை. அதில் சோழிங்கநல்லூர், பெருங்குடி, கந்தன்சாவடி ஆகியவை முக்கியமானவை. இங்கு, ஏராளமான ஐடி நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வர்த்தக வளாகங்கள், தொழிற்சாலைகள், தனி வீடுகள் என்று சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் உள்ளன. இந்த பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள், சிறு கடை உரிமையாளர்கள் தங்கள் பகுதியில் கழிவு நீர் வாய்க்கால்களை அமைக்க வேண்டும், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால் அந்தப் பகுதியில் உள்ள அதிமுக விஐபி ஒருவரின் தலையீட்டால், இந்தப் பணிகள் நத்தை வேகத்தில் நடந்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதற்கு முக்கிய காரணம், முருகனின் மற்றொரு பெயர் கொண்ட இந்த விஐபியின் ஒவ்வொரு விநாடி சிந்தனையும் எப்படி பணம் சம்பாதிக்கலாம் என்பதுதான். இதற்காகவே, தொகுதியில் உள்ள குறைகளை பட்டியலிட்டு அதற்கு தகுந்தாற்போல மாற்று ஏற்பாடுகளை செய்து கொண்டு, சம்பந்தப்பட்ட நிறுவனம், உரிமையாளர்களை அணுகி வியாபாரம் பேசி பணிய வைப்பது தான் இவரது பாணி. இதில், முதல் இடத்தை பிடித்துள்ளது கழிவு நீர் விவகாரம்தானாம். அந்தப் பகுதியில்தான் அதிகமான அளவில் கழிவு நீர் அகற்றும் லாரிகள் உள்ளனவாம். இந்த லாரிகள் அனைத்தும் சிண்டிகேட் அமைத்து அதிகமாக கட்டணம் வாங்கி இயக்கப்படுகிறதாம். இதற்காக தினமும் ஒரு குறிப்பிட்ட மாமூலை விவிஐபிக்கு தர வேண்டும் என்று நிர்பந்திப்பதாக நீண்டகாலமாக குற்றச்சாட்டு உள்ளது.

இதற்காக பல தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஒரு மாதத்திற்கு பல லட்சம் ரூபாயை செலவழிக்க வேண்டியுள்ளதாம். இந்த நிறுவனங்கள் அப்போதைய அதிமுக அமைச்சரிடம் சென்று கழிவு நீர் அகற்றும் நிலையம் அமைக்க வேண்டும் என்று மனு கொடுத்தால், அந்த மனு இவரிடம் சிறிது நேரத்தில் வந்து விடுமாம். அந்த அளவுக்கு மேலிடத்தில் செல்வாக்கோடு இருந்துள்ளார். மேலும் பல குடியிருப்புகள், கழிவு நீரை மழை நீர் கால்வாயுடன் இணைத்துள்ளனர். இதனால் ஏரிகள், குளங்களில் விடப்படும் மழைநீர் கால்வாயினால் பெரிய அளவில் இந்தப் பகுதியில் மாசு ஏற்படுவதோடு, நோய் பரப்பும் பகுதியாகவும் உள்ளது.

இந்த சிண்டிகேட் லாரிகள் அதிமுக விஐபியின் ஆதரவுடன், அவருக்கு மாமூல் கொடுத்து ஓடுவதால் விதிகளை மீறி நீர் நிலைகள் உள்ள பகுதிகள், ஏரிகளில் கொண்டு போய் தைரியமாக விடுகிறார்களாம். இதில் பல லாரிகள் அந்த விஐபிக்கு சொந்தமாக உள்ளன. இப்படி நீர்நிலை, ஏரிகளில் கழிவுநீரை கொட்டுவதன் மூலமும் நோய் பரவும் அபாயம் அந்தப் பகுதியில் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பல முறை புகார் செய்தும் பலன் இல்லை. இப்போது கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது.  ஆனால் பணிகள் நத்தை வேகத்தில் நடந்து வருகிறது. இதற்கும் இந்த விஐபியின் மிரட்டல்தான் காரணம். இதற்காக பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான இடத்தில் அத்துமீறி பொதுமக்களை அவர் குடியேற்றினாராம். இப்போது அந்தப் பகுதிகளுக்கு மின்சார இணைப்பு, சாலைகள் வசதி செய்யப்பட்டுள்ளதாம். ஆனால் இதுவரை பட்டா மட்டும் வாங்கிக் கொடுக்காமல் மக்களை ஏமாற்றி வருகிறாராம்.

பொதுமக்கள் ஏற்கனவே வசித்த பகுதியில் அடுக்குமாடி வணிக கட்டிடங்களை கட்டி வாடகைக்கு விட்டுள்ளாராம். குளம் உள்ள பகுதியில்தான் அலுவலகமே கட்டியுள்ளாராம். அரசு நிலத்தில் (டிஎன்ஆர்டிசி) அவர் கோயிலை கட்டியுள்ளாராம். அந்த கோயிலுக்கு தன்னையே டிரஸ்டியாக நியமித்துக் கொண்டாராம். கோயிலை ஒட்டி கடைகளையும் கட்டியுள்ளாராம். இதனால் அரசு நிலத்தில் உள்ள கோயிலை இந்து அறநிலையத்துறை கைப்பற்றி, அரசு அதிகாரியை டிரஸ்டியாக போட்டு கோயிலை பொதுமக்களின் வழிபாட்டுக்காக நடத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் ஒரு குறிப்பிட்டவரின் கையில் கோயில் நிர்வாகம் சிக்கி சின்னாபின்னமாகயுள்ளதாக கூறப்படுகிறது.

பெருங்குடி முழுவதும் பெரும்பாலான அரசு இடங்கள் பெருமளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் உள்ள கல்லுக்குட்டை பகுதியில் 320 ஏக்கரில் உள்ள நீர் நிலைகளை இந்த விஐபிதான் சில ஆண்டுகளுக்கு முன்னர் தூர்வாரினார். அதில் கிடைத்த மண்ணை மட்டும் பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்து ஏப்பம் விட்டுள்ளாராம். இதனால் இந்தப் பகுதியில் நடைபெறும் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு, கழிவு நீர் அகற்றும் பிரச்னை, கோயில் ஆக்கிரமிப்பு ஆகியவை குறித்து புதிய அரசு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயிலை அறநிலையத்துறை கைப்பற்ற வேண்டும். பொதுமக்களை அதிமுக விஐபியிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது, எங்க ஏரியா..  உள்ளே வராதே...
ஒரு லாரிக்கு ஒரு நாளுக்கு குறிப்பிட்ட பணத்தை இந்த விஐபியிடம் ‘கட்டிங்’காக (கப்பம்) கொடுக்க வேண்டுமாம். இதனால் வெளி பகுதியைச் சேர்ந்த கழிவு நீர் அகற்றும் லாரிகள் இந்தப் பகுதிக்குள் வர முடியாது. கழிவு நீர் அகற்றும் லாரிகள் ஒரு லோடுக்கு மற்ற பகுதிகளில்  எல்லாம் 5 கி.மீ. தூரத்துக்கு ரூ.700 தான் வாங்குகின்றனர். ஆனால் 500  மீட்டர் தூரம் உள்ள இந்த சிண்டிகேட் குழுவில் உள்ள லாரிகள் ரூ.800 முதல் ரூ.1000 வரை வாங்குகிறார்களாம். இதன் மூலம் மட்டுமே பல லட்சம் மாமூல் கிடைக்கிறதாம்.

மச்சினியின் ராஜ்ஜியம்..
அதிமுக விஐபி மனைவியின் சகோதரி வசம்தான் அந்தப் பகுதியில் உள்ள அம்மா உணவம் உள்ளதாம். இந்த உணவகத்துக்கு வாங்கும் காய்கறிகள், மளிகை பொருட்கள் அனைத்தும் மச்சினியின் வீட்டுக்குச் சென்று விடுமாம். மீதம் உள்ள பொருட்களில்தான் அம்மா உணவகம் நடக்கிறதாம். மச்சினியின் பெயரான அமுதா பெயரைத்தான் அதாவது அமுதா உணவகம் என்றுதான் அதிமுகவினரே அழைக்கிறார்களாம். அதோடு நிற்காமல், ரேஷன் கடையில் இருந்து பருப்பு, ஆயில் என பல பொருட்களும் வீட்டுக்கு மாமூலாக கொடுக்க வேண்டுமாம். இவரை எதிர்த்துக் கொண்டு அந்த பகுதியில் ரேஷன் கடையில் வேலை செய்ய முடியாதாம். அதோடு நிற்காமல், சாலையில் போடப்பட்டுள்ள பூ வியாபாரம் முதல் தள்ளுவண்டியில் உள்ள பழம், காய்கறி, பானி பூரி கடை வரை அனைவருமே மச்சினிச்சியிடம் மாமூல் கொடுக்க வேண்டுமாம். இது மட்டுமே ஒரு மாதத்திற்கு பல லட்சம் வருமாம். இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் அவரது கட்டுப்பாட்டில்தான் எல்லாம் உள்ளதாம். இதனால் உள்ளூர் அதிகாரிகளை மாற்றிவிட்டு அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து சாலையோர கடைக்காரர்களை காப்பாற்ற வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறுநில மன்னன்
பெருங்குடி, கந்தன்சாவடி சோழிங்கநல்லூர் பகுதியில் ஒரு புதிய வீடு கட்டினாலும் இவருக்கு மாமூல் கொடுத்தால்தான் கட்ட முடியுமாம். இதேநிலைதான் ஐடி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கும் ஏற்பட்டுள்ளதாம். குறிப்பாக நகரின் முக்கிய பகுதியாக இந்த பகுதி விளங்கினாலும், இந்தப் பகுதியைப் பொறுத்தவரை அவர் குறுநில மன்னராகவே வாழ்ந்து வருகிறாராம்.


நடுத்தெருவில் 8 ஆயிரம் குடும்பம்
பெருங்குடி விஐபி, பல அரசு  நிலங்கள், புறம்போக்கு நிலங்களை வளைத்து அடுக்குமாடி குடியிருப்புகளை  கட்டியுள்ளார். ஏன் வர்த்தக வளாகங்களையும் கட்டியுள்ளார். இதன் மூலம் மட்டுமே பல லட்சம் ரூபாய் வாடகை வருகிறது. இதற்காக அந்தப் பகுதியில் பல  ஆண்டுகளாக வசித்த மக்களை, சொந்த வீடு கட்டித் தருவதாக கூறியும், பட்டா  வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகளை கூறியும் வெளியேற்றினார்களாம். அரசு  இடத்தில் சுமார் 8 ஆயிரம் வீடுகள் உள்ளதாம். இப்போது பட்டா கிடைக்காவிட்டால் அனைவரும் நடுத்தெருவில் நிற்கும் அவல நிலைதானாம்.

Tags : Perungudi, Kandanchavady ,AIADMK ,VIP ,Adavati , Perungudi, Kandanchavadi, Refinery, Syndicate,
× RELATED வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் 10 சவரன் பறிப்பு