×

பயிற்சியின்போது மிரட்டி பலாத்காரம் செய்த விவகாரம் பள்ளி மாணவிகள், பெண்களிடம் சிபிசிஐடி ரகசிய விசாரணை தொடங்கியது: பத்மா சேஷாத்திரி பள்ளியின் கராத்தே மாஸ்டர் கெபிராஜ் அடுத்தடுத்த வழக்குகளில் கைதாகிறார்

சென்னை: பயிற்சியின்போது மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தில் பத்மா சேஷாத்திரி பள்ளி கராத்தே மாஸ்டர் கெபிராஜ் மீது புகார் அளித்த மாணவிகள் மற்றும் இளம் பெண்களிடம் சிபிசிஐடி போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்று வருகின்றனர். இதனால் கராத்தே மாஸ்டரை அடுத்தடுத்த வழக்குகளிலும் கைது செய்ய சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பத்மா ேசஷாத்திரி பள்ளி குழுமத்துக்கு சொந்தமான சென்னை விருகம்பாக்கம் கிளையில் உள்ள பத்மா சேஷாத்திரி மில்லினியம் பள்ளியின் கராத்தே மாஸ்டர் கெபிராஜ் மீது பயிற்சி பெற்ற மாணவி ஒருவர் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் தொல்லை தந்ததாக புகார் ஒன்று அளித்தார்.  

புகாரின் அடிப்படையில் நடந்த விசாரணையில், ‘‘பத்மா சேஷாத்திரி பள்ளியின் கராத்தே மாஸ்டர் கெபிராஜ், அதிகாலையில் பயிற்சிக்கு வரும் பள்ளி மாணவிகளை தனி அறைக்கு அழைத்து சென்று மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியானது. அதை அவரது நண்பர்களான 3 பேர் நேரில் பார்த்ததாகவும் போலீசாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர். அதைதொடர்ந்து பத்மா சேஷாத்திரி பள்ளி கராத்தே மாஸ்டர் கெபிராஜ் மீது அனைத்து மகளிர் போலீசார் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். கராத்தே மாஸ்டர் கெபிராஜ் கைது ெசய்யப்பட்ட தகவல் அறிந்த பலர், அவரால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து புகார்கள் அளித்தனர். இதனால் இந்த வழக்கு மாநகர காவல் துறையில் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

அதைதொடர்ந்து சிபிசிஐடி போலீசார் கராத்தே மாஸ்டர் கெபிராஜை 2 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது கெபிராஜ் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட லேப்டாப், பென்டிரைவ் உள்ளிட்ட ெபாருட்களை பறிமுதல் செய்தனர். அதை ஆய்வு செய்த போது, பயிற்சிக்கு வரும் பள்ளி மாணவிகளை மிரட்டி தனது நண்பர்களுக்கும் விருந்து வைத்ததும் தெரியவந்தது. பத்மா சேஷாத்திரி பள்ளியின் பெண் நிர்வாகி ஒருவரின்  நட்பால் கெபிராஜ் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதைதொடர்ந்து சிபிசிஐடி போலீசார் கராத்தே மாஸ்டர் கெபிராஜால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் தொலைபேசி எண்கள் மற்றும் சிபிசிஐடியின் கட்டுப்பட்டு அறை எண், இ-மெயிலிலும் 24 மணி நேரமும் புகார் அளிக்கலாம் என்று  அறிவித்திருந்தனர். புகார் அளிக்கும் நபர்கள் விபரங்கள் அனைத்தும் ரகசியம் காக்கப்படும் என்று அறிவித்திருந்தனர்.

 அதைதொடர்ந்து கெபிராஜ் மீது வெளிநாட்டு பெண், மாணவிகள் என 30க்கும் மேற்பட்ட புகார்கள் சிபிசிஐடிக்கு வந்து குவிந்தது. பின்னர் சிபிசிஐடி போலீசார் புகார் அளித்த ஒவ்வொருவரிடமும் தொலைபேசி மற்றும் இ-மெயில் மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த புகார்களின் படி தான் வெளிநாட்டு பெண் சென்னையில் தங்கி ஜூடோ பயிற்சியின் போது மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியானது. அதை தொடர்ந்து பத்மா சேஷாத்திரி பள்ளி கராத்தே மாஸ்டர் கெபிராஜ் மீது சிபிசிஐடி போலீசார் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் தனியாக வழக்கு பதிவு செய்து சிறையில் இருந்த கெபிராஜை கைது செய்தனர்.

மேலும், புகார் அளித்த பள்ளி மாணவிகளிடம் சிபிசிஐடி போலீசார் கடந்த ஒரு வாரமாக ரகசிய விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பள்ளி மாணவியை அறைக்கு அழைத்து  சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததும். இதனால் அந்த மாணவி கடுமையாக பாதிக்கப்பட்டதும் தெரியவந்தது. அதைதொடர்ந்து சிறையில் உள்ள பத்மா சேஷாத்திரி பள்ளி கராத்தே மாஸ்டர் கெபிராஜ் மீது 3வது வழக்காக நேற்று முன்தினம் சிபிசிஐடி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். அதைநேரம் வெளிநாட்டு பெண், பள்ளி மாணவி அளித்த புகார்களின் கீழ் சிபிசிஐடி போலீசார் பத்மா சேஷாத்திரி பள்ளி கராத்தே மாஸ்டர் கெபிராஜை கைது செய்து இருந்தாலும், காவலில் எடுத்து விசாரணை நடத்தவில்லை. எனவே, இந்த இரண்டு வழக்கிலும் தனித்தனியாக கெபிராஜை சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். அதற்கான பணிகளிலும் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே கெபிராஜ் மீது பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகார்களை சிபிசிஐடி போலீசார் தனித்தனியாக ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த விசாரணையில் பத்மா சேஷாத்திரி பள்ளி கராத்தே மாஸ்டர் கெபிராஜிக்கு எதிராக வலுவான வீடியோ ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கராத்தே மாஸ்டர் கெபிராஜை அடுத்தடுத்த வழக்குகளில் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக சிபிசிஐடி போலீஸ் வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

Tags : CPCIT ,Padma Seshadri School ,Kepraj , Rape, Schoolgirls, CPCIT, Secret Investigation, Karate Master, Kibraj
× RELATED சயானிடம் சிபிசிஐடி போலீசார் 8மணி நேரம் விசாரணை