×

கொரோனா 3வது அலை அக்டோபரில் உச்சக்கட்ட தாக்குதல்: ஒன்றிய அரசு விஞ்ஞானிகள் குழு கணிப்பு

புதுடெல்லி: ‘கொரோனா 3வது அலை, அக்டோபர்- நவம்பர் மாதங்களில் உச்சத்தை தொடும்,’ என்று ஒன்றிய அரசின் விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்தாண்டு மார்ச்சில் கொரோனா முதல் அலை ஏற்பட்டது. இந்தாண்டும் அதே மார்ச்சில் இருந்து 2வது அலை தாக்குதல் நடந்து கொண்டிருக்கிறது. இதில், இதுவரையில் 3 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 லட்சம் பேர் இறந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா  பாதிப்புகள் எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே கணித்து கூறுவதற்காக, 3 விஞ்ஞானிகள் கொண்ட குழுவை ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நியமித்துள்ளது. இது, ‘சூத்திர மாதிரி’ எனப்படும் எண் கணிதம் அடிப்படையில், கொரோனா பாதிப்புகள் எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்பதை கணித்து, அரசுக்கு ஆலோசனைகள் வழங்கி வருகிறது. தற்போது, இக்குழு 3வது அலையின் பாதிப்புகள் குறித்து கணித்துள்ளது. இது பற்றி இக்குழுவை சேர்ந்த விஞ்ஞானிகளில் ஒருவரான, மணிந்திர அகர்வால் கூறியிருப்பதாவது:

கொரோனா 3வது அலை பாதிப்புகள் அக்டோபா் - நவம்பா் மாதங்களில் உச்சத்தை அடைய வாய்ப்பு உள்ளது. இதன் வேகத்தை  தடுக்க வேண்டும் என்றால், கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.  இல்லை என்றால், தடுப்பூசிகள் போடப்பட்டுள்ள போதிலும், 2வது அலையில் ஏற்பட்ட தினசரி பாதிப்புகளி்ல் பாதி அளவாவது 3வது அலையில் ஏற்படும். தினசரி 1.5 லட்சம் முதல் 2 லட்சம் மக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. நோய் எதிர்ப்பு திறன், தடுப்பூசி செயல் திறன் இழப்பு, உருமாறிய புதிய கொரோனா வகைகள் போன்றவை, இந்த கணிப்புக்காக இம்முறை  கருத்தில் கொள்ளப்பட்டு இருக்கின்றன.

2வது அலையின் போது இவை கருத்தில் கொள்ளப்படவில்லை. எனவே, 3வது அலை பற்றிய கணிப்பு துல்லியமாக அமைய வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மருத்துவர்களுக்கு பாரத ரத்னா டெல்லி முதல்வர் வேண்டுகோள்
கொரோனா 2வது அலையில்  பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது ஏற்பட்ட தொற்றின் காரணமாக, நாடு முழுவதும் 800 மருத்துவர்கள் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். இவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் இவர்கள் அனைவருக்கும் ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும். இவர்களுக்கு செய்யும் உண்மையான அஞ்சலி இதுவாகத்தான் இருக்கும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில் ஒன்றிய அரசு வலியுறுத்தி உள்ளார்.

புது உருமாற்றம் உருவானால் பாதிப்பு அதிகமாக இருக்கும்
விஞ்ஞானி மணிந்திர அகர்வால் மேலும் கூறுகையில், ‘‘நாட்டில் டெல்டா வைரஸ் வகையால்தான், 2வது அலையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. தற்போது, இதில் இருந்து புதிதாக உருமாறிய ‘டெல்டா பிளஸ்’ வகை வைரசாலும், 3வது அலையில் தாக்குதல்  அதிகமாக இருக்கும். ஒருவேளை இதைத் தவிர புதிதாக உருமாற்ற வைரஸ்கள் உருவானால், 3வது அலையில் தொற்று மிக வேகமாகவும், அதிகமாகவும் பரவும் அபாயம் உள்ளது,’’என்றார்.


புதிதாக 955 பேர் பலி
நாட்டில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு, பலி பற்றி ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
* புதிதாக 43 ஆயிரத்து 71 பேர் பாதித்துள்ளனர். இதன்மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 5 லட்சத்து 45 ஆயிரத்து 433 ஆக உயர்ந்துள்ளது.
* புதிதாக 955 பேர் தொற்றால் இறந்துள்ளனர். இதையும் சேர்த்து, நாட்டின் மொத்த பலி எண்ணிக்கை 4 லட்சத்து 2 ஆயிரத்து 5 ஆக அதிகரித்துள்ளது.
* தற்போது, நாடு முழுவதும் 4 லட்சத்து 85 ஆயிரத்து 350 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : Corona ,wave peak attack ,US government , Corona 3rd wave peak attack in October: US government scientists forecast
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...