அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான தளர்வுகள் இன்று முதல் அமல்

*தமிழகம் முழுவதும் போக்குவரத்து சேவை

*ஓட்டல்களில் உட்கார்ந்து சாப்பிட அனுமதி

சென்னை: தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத்துக்கும் பொருந்தும் வகையில், ஒரே தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு வரும் 12ம் தேதி வரையில் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது இன்று முதல் தமிழகம் முழுவதும் அமலாகியது.  தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதையடுத்து ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 12ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் கடைகள் செயல்படும் நேரம் இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு இன்று முதல் அமலாகியது.  

அதன்படி, அரசு, மற்றும் தனியார் தொழில் சார்ந்த பொருட்காட்சி நிகழ்வுகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து இதற்கான பணிகள் இன்று முதல் தொடங்கியுள்ளது. இதேபோல் உணவகங்கள், விடுதிகள், பேக்கரி, தங்கும் விடுதிகளில் 50 சதவீத பணியாளர்கள் மட்டுமே உட்கார்ந்து சாப்பிட அனுமதிக்கப்பட்டனர். இவை இன்று முதல் இரவு 8 மணி வரை செயல்படும். டீ கடைகளில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மேலும், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்களில் ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. கூட்ட நெரிசலை தவிர்க்க பல இடங்களில் பகுதி, நேரம் வாரியாக யோகா மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் செயல்படுத்தப்பட்டது. முந்தைய ஊரடங்கு தளர்வில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டது. இந்தநிலையில் இன்று முதல் நேர நீட்டிப்பு வழங்கப்பட்டு காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்படும்.  

அனைத்து வழிபாட்டுத் தலங்களும் அரசின் வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி திறக்கப்பட்டது. ஆனால், திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு நடத்தக்கூடாது. அனைத்து மாவட்டங்களிலும் துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் மட்டுமே செயல்பட வேண்டும். வணிக வளாகங்கள் காலை 9 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8 மணி வரை செயல்படலாம். ஆனால், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் மற்றும் விளையாட்டுக் கூடங்களுக்கு அனுமதி இல்லை. கடந்த ஊரடங்கு தளர்வின் போது 27 மாவட்டங்களுக்கு மட்டுமே பேருந்து சேவை அனுமதிக்கப்பட்டது. தற்போது ஒரே தளர்வுகளின் அடிப்படையில் அனைத்து மாவட்டத்திற்குள்ளேயும், மாவட்டங்களுக்கிடையேயும் 50 சதவீத பயணிகளுடன் பொது பேருந்து போக்குவரத்து சேவைக்கு அனுமதிக்கப்பட்டது. இதனால், காலை முதல் வழக்கமான போக்குவரத்து சேவை செயல்பட தொடங்கியது.

முகக்கவசம் அணிந்து வந்த பயணிகள் மட்டும பஸ்சில் அனுமதிக்கப்பட்டனர். சானிடைசர் பயன்படுத்திய பிறகே டிக்கெட் வழங்கப்பட்டது. மேலும், தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்பட்டது. இதேபோல், எஸ்.ஆர்.எப்/ஜெ.ஆர்.எப், எம்.பில், பி.எச்டி ஆகிய ஆராய்ச்சி படிப்பு மாணவர்கள் தங்கள் கல்வி சார்ந்த பணிகளை தொடர்புடைய கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இன்று முதல் மேற்கொள்ளலாம். பூங்காக்களில் நடைபயிற்சிக்கு வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். இதற்கான அறிவிப்பு ஒவ்வொரு பூங்காக்களின் வாயில்களில் ஒட்டப்பட்டிருந்தது. மாவட்டங்களுக்கிடையே பயணிக்க இ-பாஸ் மற்றும் இ-பதிவு நடைமுறை ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பொது போக்குவரத்து சேவை அதிக அளவில் இயங்கியது. சென்னையை ஒட்டிய சுங்கசாவடி பகுதிகளில் காலை முதலே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒரே மாதிரியான தளர்வுகள் இன்று காலை முதல் அமலாகியதை அடுத்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இயல்பு நிலை திரும்பியுள்ளது.  

எதற்கெல்லாம் தடை நீட்டிப்பு?

மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து, மத்திய   உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர சர்வதேச விமான  போக்குவரத்து, திரையரங்குகள், அனைத்து  மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள்,  பொது மக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள்,   பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள், பள்ளிகள் மற்றும்  கல்லூரிகள், உயிரியல் பூங்காக்கள் ஆகியவற்றிற்கு தடை நீட்டிக்கப்படுகிறது.

Related Stories:

>