ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 45 நாளில் 400 படுக்கைகளுடன் கட்டிடம் கட்டி முடித்து சாதனை: அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வு

ஈரோடு:  தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கையை அனைத்து மாவட்டத்திலும் தீவிரப்படுத்த உத்தரவிட்டார். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அந்த மருத்துவமனை வளாகத்திலேயே முற்றிலும் ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட 400 படுக்கைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்ட அரசு முடிவு செய்தது. இதற்கான பங்களிப்பை தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர்  சு.முத்துசாமி கோரியிருந்தார்.

இதனை ஏற்று ஈரோடு மாவட்ட ரோட்டரி சங்கங்கள், பல்வேறு தொழில் நிறுவனங்கள், சேவை நிறுவனங்கள் தங்களது பங்களிப்பை அளித்தன. அதன்படி, கடந்த மே 18ம் தேதி ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில்  69ஆயிரம் சதுர அடியில் மூன்று தளத்தில் முற்றிலும் ஆக்சிஜன் வசதியுடன் 400 படுக்கைகள் கொண்ட கட்டிடம் கட்டும் பணி தொடங்கியது. இந்த பணி இரவு பகலாக தீவிரமாக நடந்தது. இந்த பணிகளை தினமும் வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் பார்வையிட்டு, பொறியாளர்களுடன் ஆலோசனை நடத்தி ஆய்வு மேற்கொண்டு வந்தார்.

இந்த கட்டிட பணிகள் கடந்த 1ம் தேதி முற்றிலும் நிறைவடைந்து, திறப்பு விழாவுக்கு  தயார் செய்யப்பட்டது. அந்த கட்டிடத்தை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் மணி, ரோட்டரி மருத்துவ பாதுகாப்பு டிரஸ்ட் நிறுவனர் சகாதேவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். ஈரோடு மாவட்டத்தில் வெறும் 45 நாளில் பிரம்மாண்டமாக 3 தளங்களுடன் கட்டி முடிக்கப்பட்ட முதல் கட்டிடம் இது எனவும், தற்போது தமிழகத்தின் சாதனையாகவும்  கருதப்படுகிறது. இந்த கட்டிடம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: