×

குத்தகைதாரருக்குபோட்டியாக ஏரியில் வளர்ப்பு மீன்களை சூறையாடிய கிராம மக்கள்: 7 பைக்குகள் தீவைத்து எரிப்பு; பெரம்பலூர் அருகே போலீஸ் குவிப்பு

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே அரும்பாவூர் பெரிய ஏரியில் குத்தகைதாரருக்கு போட்டியாக கிராம மக்கள் ஏரியில் இறங்கி வளர்ப்பு மீன்களை சூறையாடி சென்றனர். அப்போது நடந்த மோதலில் 7 பைக்குகள் தீவைத்து எரிக்கப்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அரும்பாவூரில் பெரியஏரி உள்ளது. 800 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியிலுள்ள நீராதாரத்தை நம்பி அரும்பாவூர் மீனவர் சமுதாயத்தை சேர்ந்த 80 குடும்பத்தினர், அரும்பாவூர் உள்நாட்டு மீனவர் சங்கம் என்கிற பெயரில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள, ஏரியை குத்தகைக்கு எடுத்து மீன்களை வளர்த்து, பைபர் படகுகள் மூலம் பிடித்து விற்பனை செய்துவருவது வழக்கம்.

கடந்த ஆண்டு பொதுப்பணித்துறை சார்பாக ஏலம் நடத்தியபோது, மீனவ சமுதாயத்தை சேர்ந்த ரவி என்பவர் 2020 முதல் 2025வரை 5 ஆண்டுகளுக்கு ரூ.91,300க்கு ஏலம் எடுத்து மீன்குஞ்சுகளை வாங்கிவிட்டு வளர்த்து வருகிறார். அதேபோல் நேற்று அதிகாலை சேலம் மாவட்டம் கெங்கவல்லி, தெடாவூர், ஆணையம்பட்டி, வீரகனூர் உள்ளிட்ட கிராமங்கள், பெரம்பலூர் மாவட்டத்தில் அரும்பாவூர், பூலாம்பாடி, பெரியம்மாபாளையம், அய்யர்பாளையம், தொண்டமாந்துறை, வெங்கலம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு அரும்பாவூர் ஏரிக்குள் அத்துமீறி இறங்கி மீன்களை பிடித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று 10 கிராமங்களை சேர்ந்தவர்கள் வலைகளுடன் மீன்களை வேட்டையாடுவதை அறிந்து உள்ளூர் மீனவர்கள் கூட்டம் கூட்டமாக தடுக்க சென்றனர். இதில் இருதரப்பினருக்குமிடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பும் நடந்தது. பின்னர் வெளியூரிலிருந்து மீன்பிடிக்க வந்தவர் 7 பேரின் பைக்குகள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதனால் அரும்பாவூர் பெரியஏரிக்கரை போர்க்களமானது. தகவலறிந்த பெரம்பலூர் மாவட்ட எஸ்பி மணி, ஏடிஎஸ்பி ஆரோக்கியபிரகாசம் உள்ளிட்டோர் அதிரடிப்படை போலீசாருடன் வந்து லேசான தடியடி நடத்தி கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

Tags : Perambalur , Villagers who looted farm fish in the lake to compete with tenants: 7 bikes set on fire; Police concentrate near Perambalur
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்