×

தேனி அரசு மருத்துவமனையில் உயிருடன் இருந்த குழந்தையை இறந்ததாக கொடுத்த அலட்சியம்: அடக்கம் செய்ய முயன்றபோது கைகள் அசைந்ததால் தப்பியது; நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உறவினர்கள் வலியுறுத்தல்

பெரியகுளம்: தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இறந்ததாக கொடுத்த குழந்தை, அடக்கம் செய்ய சென்றபோது கைகளை ஆட்டியதால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மருத்துவமனையில் சேர்த்த அவர்கள், கவனக்குறைவாக உயிருடன் விளையாடிய மருத்துவர்கள், செவிலியர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தாமரைக்குளம் தாசில்தார் நகரைச் சேர்ந்தவர் பிளவேந்திர ராஜா. இவரது மனைவி பாத்திமா மேரி என்ற வானரசி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த வானரசிக்கு நேற்று முன்தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டது. நள்ளிரவு 12.30 மணியளவில் அவரை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அதிகாலை 3.30 மணியளவில் பெண் குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தை இறந்தே பிறந்ததாக செவிலியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து நேற்று காலை 8 மணியளவில் குழந்தையின் உடலை பிளாஸ்டிக் வாளியில் வைத்து கொடுத்துள்ளனர். இதைப் பெற்றுக்கொண்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள், பெரியகுளம் - தேனி மெயின்ரோட்டில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர். அங்கு குழி தோண்டி அடக்கம் செய்யப்போகும்போது, திடீரென குழந்தை கைகள் அசைவதை உறவினவர்கள் கவனித்து அதிர்ச்சியடைந்தனர். பதறிப்போன அவர்கள், குழந்தை உயிரோடு இருப்பதை அறிந்து அவசர, அவசரமாக மீண்டும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அங்கு குழந்தைக்கும், தாய்க்கும் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். உயிருடன் இருந்த குழந்தையை இறந்ததாக கவனக்குறைவாக கொடுத்த மருத்துவர்கள், செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் பெரியகுளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Theni Government Hospital ,Tamil Nadu government , Indifference given to the death of a living child at Theni Government Hospital: escaped by shaking hands while attempting to bury; Relatives urge Tamil Nadu government to take action
× RELATED பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு...