×

நாடாளுமன்றத்தில் மம்தாவுடன் இணைந்து செயல்பட வியூகம் மக்களவை கட்சித் தலைவர் ஆதிரை நீக்க காங். திட்டமா? சசிதரூரை நியமிக்க வாய்ப்பு

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் திரிணாமுல் காங்கிரசுடன் நெருங்கி இணைந்து செயல்படுவதற்காக, மக்களவை காங்கிரஸ் தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மாற்ற கட்சி மேலிடம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ், படுதோல்வியை சந்தித்தது. இம்மாநில காங்கிரஸ் தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவராகவும், நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழுவின் தலைவராகவும் இருந்து வருகிறார்.

மேற்கு வங்கத்தில் இவர், முதல்வர் மம்தா பானர்ஜியையும், ஆளும் திரிணாமுல் காங்கிரதசையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும், சட்டப்பேரவை தேர்தலுக்கு பின் மேற்கு வங்கத்தில் பாஜ.வினருக்கு எதிராக திரிணாமுல் காங்கிரசார் வன்முறையில் ஈடுபட்டது பெரும் சர்ச்சையாக இருக்கிறது. இம்மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக குற்றம்சாட்டிய ஆளுநர் ஜெகதீப் தங்கார், மத்திய அரசுக்கு அறிக்கையும் அளித்தார். அவர் டெல்லி சென்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்து பேசியபோது, ஆதிர் ரஞ்சன் சவுத்ரியையும் சந்தித்து பேசினார். இதற்கு, மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்தார். ஆளுநரை ஆதிர் சந்தித்தது, காங்கிரஸ் தலைமைக்கும் அதிருப்தியை அளித்துள்ளது.

இந்நிலையில், மேற்கு வங்கத்திலும், நாடாளுமன்றத்திலும் பாஜ.வுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரசுடன் இணைந்து செயல்பட, காங்கிரஸ் தலைமை விரும்புகிறது. வரும் 19ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கும் நிலையில், அக்கட்சி உடனான நெருக்கத்தை அதிகரிக்கவும் நினைக்கிறது. இதன் முதல் கட்டமாக, மக்களவை காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ஆதிர் ரஞ்சனை நீக்குவது பற்றி பரிசீலிக்கப்படுகிறது. இவருக்கு பதிலாக, திருவனந்தபுரம் எம்பி.யான சசிதரூர் அல்லது பஞ்சாப் மாநிலம், ஆனந்த்பூர் சாஹிப் தொகுதி எம்பி.யான மணிஷ் திவாரி ஆகியோரி்ல ஒருவரை மக்களவை காங்கிரஸ் தலைவராக நியமிப்பது பற்றி காங்கிரஸ் மேலிடம் பரிசீலிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

* காங்கிரஸ் மறுப்பு
காங்கிரஸ் தகவல் தொடர்பாளர் பவன் கெரே டெல்லியில் நேற்று அளித்த பேட்டியின்போது, ஆதிர் ரஞ்சன் மாற்றம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலில், ‘‘மக்களவை காங்கிரஸ் தலைவர் மாற்றம் பற்றிய செய்திகள் அனைத்தும் தேவையற்றது; ஆதாரமற்றது,’’ என்றார்.

Tags : Mamata ,Lok Sabha party ,Sachitharur , Strategy to work with Mamata in Parliament The plan? Opportunity to appoint Sachitharur
× RELATED ராம நவமியின்போது பாஜ வன்முறையை தூண்டியது: முதல்வர் மம்தா குற்றச்சாட்டு