மெகுல் சோக்சி மீண்டும் ஜாமீன் மனு தாக்கல்

புதுடெல்லி: பிரபல வைர வியாபாரியான மெகுல் சோக்‌சியும், நீரவ் மோடியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,500 கோடிக்கு கடன் பெற்று மோசடி செய்து வெளிநாடு தப்பி சென்றனர். கரீபியன் தீவுகளின் ஒன்றான ஆன்டிகுவா நாட்டில் சோக்சி 2018ம் ஆண்டே குடியுரிமை பெற்றதால், அங்கு வசித்து வருகிறார். இந்நிலையில், ஆன்டிகுவாவில் இருந்து டொமினிக்கா நாட்டிற்கு சட்ட விரோதமாக நுழைந்ததாக சோக்‌சியை அந்நாட்டு போலீசார் கடந்த மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரை நாடு கடத்தி வருவதற்காக இந்தியாவில் இருந்து சென்ற சிபிஐ அதிகாரிகள்,  நீதிமன்றத்தில் வழக்கு முடியாததால்  திரும்பினர். டொமினிக்கா சிறையில் உள்ள கோக்சி, ஏற்கனவே 2 முறை ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். ஒரு முறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திலும், மறுமுறை உயர் நீதிமன்றத்திலும் ஜாமீன் மறுக்கப்பட்டது. தற்போது, 3வது முறையாக உயர் நீதிமன்றத்தில் அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். இது நாளை விசாரணைக்கு வருகிறது.

Related Stories:

>