சர்வதேச கிரிக்கெட் ரன் குவிப்பு முதலிடத்துக்கு முன்னேறி மித்தாலி அபார சாதனை: டெஸ்ட் 669 ஒருநாள் 7304 டி20 2364 மொத்தம் 10,337

வொர்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ஆட்டமிழக்காமல் 75 ரன் விளாசிய இந்திய அணி கேப்டன் மித்தாலி ராஜ், மகளிர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த வீராங்கனைகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார். வொர்செஸ்டர் கவுன்டி மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசியது. நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவரில் இங்கிலாந்து 219 ரன் குவித்து ஆல் அவுட்டானது.

வின்பீல்டு ஹில் 36, கேப்டன் ஹீதர் நைட் 46, நதாலியே ஸ்கிவர் 49, சோபியா டங்க்லி 28 ரன் விளாசினர். இந்திய பந்துவீச்சில் தீப்தி 3, ஜுலன், ஷிகா, பூனம் யாதவ், ஸ்நேஹ் ராணா, ஹர்மான்பிரீத் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். அடுத்து களமிறங்கிய இந்தியா 46.3 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 220 ரன் எடுத்து வென்றது. ஷபாலி 19, மந்தனா 49, ஜெமிமா 4, ஹர்மான்பிரீத் 16, தீப்தி 18, ஸ்நேஹ் ராணா 24 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். கேப்டன் மித்தாலி ராஜ் 75 ரன் (86 பந்து, 8 பவுண்டரி), ஜுலன் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. மித்தாலி ஆட்ட நாயகி விருதும், இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டோன் தொடர் நாயகி விருதும் பெற்றனர். இந்த போட்டியில் 75* ரன் விளாசிய மித்தாலி, சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த வீராங்கனைகள் பட்டியலில் இங்கிலாந்தின் சார்லோட்டி எட்வர்ட்சை (10,273 ரன்) பின்னுக்குத் தள்ளி முதலிடத்துக்கு முன்னேறினார். அவர் இதுவரை 217 ஒருநாள் போட்டிகளில் 7304 ரன் (சராசரி 52.80), 11 டெஸ்டில் 669 ரன் (சராசரி 44.60), 89 டி20ல் 2364 ரன் (சராசரி 37.52) என மொத்தம் 10,337 ரன் குவித்துள்ளார். ஆண்கள் மற்றும் மகளிர் சர்வதேச கிரிக்கெட் ரன் குவிப்பில் சச்சின் டெண்டுல்கர் (34,357 ரன்), மித்தாலி ராஜ் (10,337 ரன்) என இரண்டு பிரிவிலும் இந்தியர்களே முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், சச்சின் மற்றும் மித்தாலி இருவருமே ஒரே வயதில் (16 வயது, 205 நாள்) சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானது அபூர்வ ஒற்றுமையாக அமைந்துள்ளது.

Related Stories: