×

விம்பிள்டன் டென்னிஸ் 4வது சுற்று இன்று தொடக்கம்

லண்டன்: விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவில், 4வது சுற்று ஆட்டங்கள் இன்று நடைபெறுகின்றன. டென்னிஸ் ரசிகர்களின் ஆவலையும் எதிர்பார்ப்பையும் வெகுவாகத் தூண்டியுள்ள விம்பிள்டன் தொடர், பரபரப்பான காலிறுதிக்கு முந்தைய சுற்றை எட்டியுள்ளது. ஆண்கள் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவுகளில் 4வது சுற்று ஆட்டங்கள் இன்று நடைபெறுகின்றன. ஆண்கள் பிரிவில் நம்பர் 1 வீரரும் நடப்பு சாம்பியனுமான நோவாக் ஜோகோவிச் (செர்பியா), தனது 4வது சுற்றில் சிலி வீரர் கிறிஸ்டியன் கரினுடன் (25 வயது, 20வது ரேங்க்) மோதுகிறார்.

சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் தனது 4வது சுற்றில் இத்தாலியின் லொரன்ஸோ சொனேகோவை (26 வயது, 27வது ரேங்க்) எதிர்கொள்கிறார். முன்னணி வீரர்கள் டானில் மெட்வதேவ், ஆந்த்ரே ருப்லேவ் (ரஷ்யா), ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரெவ், டெனிஸ் ஷபோவலாவ் (கனடா), மேட்டியோ பெரட்டினி (இத்தாலி) ஆகியோரும் இன்று 4வது சுற்று சவாலை சந்திக்கின்றனர். மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் நம்பர் 1 வீராங்கனை ஆஷ்லி பார்தி (ஆஸ்திரேலியா), செக் குடியரசின் கிரெஜ்சிகோவாவுடன் மோதுகிறார். அமெரிக்காவின் கோகோ காப் - ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) மோதும் ஆட்டமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இங்கிலாந்தின் 18 வயது இளம் வீராங்கனை எம்மா ரதுகானு, ஆஸ்திரேலியாவின் அஜ்லா டாம்ஜனோவிச்சுடன் மோதுகிறார். முன்னணி வீராங்கனைகள் இகா ஸ்வியாடெக் (போலந்து), அரினா சபலென்கா (பெலாரஸ்), கரோலினா பிளிஸ்கோவா, கரோலினா முச்சோவா (செக்.) ஆகியோரும் காலிறுதிக்கு முன்னேறும் உறுதியுடன் இன்று களமிறங்குகின்றனர். கலப்பு இரட்டையர் பிரிவு 3வது சுற்றில் விளையாட இந்தியாவின் சானியா மிர்சா - ரோகன் போபண்ணா ஜோடி தகுதி பெற்றிருப்பது இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.


Tags : Wimbledon , The 4th round of Wimbledon Tennis starts today
× RELATED விம்பிள்டன் இறுதிப்போட்டியில்...