×

கோபா அமெரிக்கா கால்பந்து அரையிறுதிக்கு முன்னேறியது அர்ஜென்டினா: மெஸ்ஸி அசத்தல்

கோயானியா: கோபா அமெரிக்கா கோப்பை கால்பந்து தொடரின் அரை இறுதியில் விளையாட அர்ஜென்டினா அணி தகுதி பெற்றுள்ளது. தென் அமெரிக்க நாட்டு அணிகளிடையே பிரேசிலில் நடைபெற்று வரும் இந்த தொடரின் லீக் சுற்று முடிவில், ஏ பிரிவில் இருந்து அர்ஜென்டினா, உருகுவே, பராகுவே, சிலி அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின. பி பிரிவில் முதல் 4 இடங்களைப் பிடித்த பிரேசில், பெரு, கொலம்பியா, ஈக்வடார் அணிகளும் காலிறுதிக்குள் நுழைந்தன.
முதல் காலிறுதியில் பெரு - பராகுவே அணிகள் மோதின. விறுவிறுப்பான ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிரா ஆனதை அடுத்து பெனால்டி ஷூட் அவுட் கடைப்பிடிக்கப்பட்டது. அதில் பெரு அணி 4-3 என்ற கோல் கணக்கில் வென்று அரை இறுதிக்கு முன்னேறியது.

மற்றொரு கால் இறுதியில் பிரேசில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் சிலி அணியை போராடி வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது. இந்த நிலையில், 3வது கால் இறுதியில் உருகுவே - கொலம்பியா அணிகள் மோதின. இப்போட்டியில் இரு அணிகளும் கோல் அடிக்கத் தவறியதால் 0-0 என சமநிலை வகித்தன. இதைத் தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட்டில் தலா 5 வாய்ப்புகள் வழங்கப்பட்டது. அதில் சிறப்பாக செயல்பட்ட கொலம்பியா அணி 4-2 என்ற கோல் கணக்கில் வென்று செமி பைனலுக்குள் நுழைந்தது.

கடைசி காலிறுதியில் நேற்று அர்ஜென்டினா - ஈக்வடார் அணிகள் பலப்பரீட்சையில் இறங்கின. இதில் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி துடிப்புடன் விளையாடி ஈக்வடார் கோல் பகுதியை முற்றுகையிட்டு நெருக்கடி கொடுத்தது. எனினும், ஈக்வடார் தற்காப்பு ஆட்டத்தில் தீவிர கவனம் செலுத்தியதால் அர்ஜென்டினா அணியால் முதல் 40 நிமிடங்களுக்கு கோல் அடிக்க முடியவில்லை. மெஸ்ஸி அடித்த ஒரு ஷாட் கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியது, அந்த அணி ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்தது.

ஆனால், 40வது நிமிடத்தில் மெஸ்ஸி கொடுத்த அருமையான பாஸில் ரோட்ரிகோ டி பால் முதல் கோல் அடித்து அர்ஜென்டினாவுக்கு 1-0 என முன்னிலை ஏற்படுத்தினார். பதில் கோல் அடிக்க ஈக்வடார் வீரர்கள் கடுமையாக முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை. இடைவேளை வரை இதே நிலை நீடித்தது. இரண்டாவது பாதியில் மெஸ்ஸி பந்தை லாவகமாகக் கடத்திச் சென்று மீண்டும் ஒரு அற்புதமான பாஸ் கொடுக்க, லாடாரோ மார்டினஸ் அதில் துல்லியமாக கோல் அடித்து அசத்தினார். இதைத் தொடர்ந்து, 90’+3வது நிமிடத்தில் கிடைத்த பிரீ கிக் வாய்ப்பில் மெஸ்ஸி அமர்க்களமாக கோல் போட்டார்.

விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்று அரை இறுதிக்கு முன்னேறியது. 1993ம் ஆண்டுக்குப் பிறகு கோபா அமெரிக்கா கோப்பையை கைப்பற்ற முடியாமல் தவித்து வரும் அர்ஜென்டினா அணி, 2வது அரையிறுதியில் கொலம்பியா அணியை சந்திக்கிறது. இப்போட்டி, பிரேசிலியாவில் இந்திய நேரப்படி நாளை மறுநாள் காலை 6.30க்கு தொடங்கி நடைபெற உள்ளது. முதல் அரை இறுதியில் பிரேசில் - பெரு அணிகள் மோதுகின்றன. அந்த போட்டி நாளை அதிகாலை 4.30க்கு தொடங்குகிறது.


Tags : Argentina ,Copa America ,-finals ,Messi , Argentina advances to Copa America semi-finals: Messi stunned
× RELATED தமிழ்நாடு அணியை வீழ்த்தி 47வது முறையாக...