×

யூரோ கோப்பை கால்பந்து உக்ரைனை போட்டுத்தாக்கியது இங்கிலாந்து: அரையிறுதியில் டென்மார்க்குடன் மோதல்

ரோம்: யூரோ கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதியில் உக்ரைன் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் பந்தாடிய இங்கிலாந்து அணி, அரையிறுதியில் டென்மார்க் அணியை சந்திக்கிறது. ஐரோப்பிய அணிகளிடையே நடைபெற்று வரும் யூரோ கோப்பை கால்பந்து தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதல் காலிறுதியில் சுவிஸ் - ஸ்பெயின் அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்ததை அடுத்து, பெனால்டி ஷூட் அவுட்டில் ஸ்பெயின் அணி 3-1 என்ற கோல் கணக்கில்வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. 2வது காலிறுதியில் இத்தாலி அணி 2-1 என்ற கோல் கணக்கில் நம்பர் 1 அணியான பெல்ஜியத்தை வீழ்த்தி செமி பைனலுக்கு முன்னேறியது.

அஜர்பைஜானின் பாகு நகரில் உள்ள ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் நடந்த 3வது கால் இறுதியில் டென்மார்க் - செக் குடியரசு அணிகள் மோதின. அதில் டென்மார்க் அணி 2-1 என்ற கோல் கணக்கில் போராடி வென்று அரையிறுதியில் நுழைந்தது. அந்த அணி சார்பில் டெலானி 5வது நிமிடத்திலும், டோல்பெர்க் 42வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். செக் குடியரசு சார்பில் பேட்ரிக் ஷிக் 49வது நிமிடத்தில் ஆறுதல் கோல் போட்டார். இந்த தொடரில் டென்மார்க் அணி விளையாடிய முதல் லீக் ஆட்டத்தின்போது நடுகள வீரர் கிறிஸ்டியன் எரிக்சனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு களத்திலேயே மயங்கி சரிந்தது குறிப்பிடத்தக்கது. அப்போட்டியில் டென்மார்க் அணி தோல்வியையும் சந்தித்தது.

அடுத்த லீக் ஆட்டத்தில் பெல்ஜியத்திடமும் மண்ணைக் கவ்விய டென்மார்க், பின்னர் மிகுந்த மன உறுதியுடன் விளையாடி தற்போது அரையிறுதிக்கும் தகுதி பெற்று அசத்தியுள்ளது. அசத்தினார் கேன்: மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த 4வது மற்றும் கடைசி கால் இறுதியில் இங்கிலாந்து - உக்ரைன் அணிகள் நேற்று மோதின. ரோம் ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், முழுமையாக ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து அணி 4-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்று 25 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு யூரோ அரையிறுதியிக்கு முன்னேறியது. அந்த அணியின் கேப்டன் ஹாரி கேன் 4வது மற்றும் 50வது நிமிடங்களில் கோல் அடித்து அசத்தினார். மாகுயர் 46வது நிமிடத்திலும், ஹெண்டர்சன் 63வது நிமிடத்திலும் கோல் போட்டனர். உக்ரைன் அணி கடுமையாக முயற்சித்தும் ஒரு கோல் கூட போட முடியவில்லை. லண்டன் வெம்ப்ளி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள முதல் அரையிறுதியில் இத்தாலி - ஸ்பெயின் அணிகளும், 2வது அரையிறுத்தில் இங்கிலாந்து - டென்மார்க் அணிகளும் மோதுகின்றன.

Tags : Euro Cup ,Ukraine ,England ,Denmark , Euro Cup football beats Ukraine England: Conflict with Denmark in the semi-finals
× RELATED ரஷ்யாவில் வாக்குச்சீட்டில் ‘போர்...