×

சகோதரர் மீது நில அபரகரிப்பு புகார் எதிரொலி; 5 ஆண்டாக எங்களுக்குள் ஒட்டோ... உறவோ இல்லை: பாஜகவை சேர்ந்த பீகார் துணை முதல்வர் அலறல்

பாட்னா: பீகார் துணை முதல்வர் ரேணு தேவியின் சகோதரர் ரவி பிரசாத் மீது நில அபகரிப்பு புகார் வெளியான நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக தனது சகோதரருடன் எந்த உறவும் இல்லை என்று துணை முதல்வர் கூறினார். பீகார் மாநிலம் பாட்னாவின் படேல் நகர் பகுதியில் வசிக்கும் பிரம்மானந்த் சிங் மற்றும் ஷரவன் குமார் ஆகியோருக்கு சொந்தமான ரூ.6 கோடி மதிப்புள்ள நிலத்தை, பாஜகவை சேர்ந்த பீகார் துணை முதல்வர் ரேணு தேவியின் சகோதரர் ரவி பிரசாத் அபகரித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து பிரம்மானந்த சிங் கூறுகையில், ‘துணை முதல்வரின் சகோரரான ரவி பிரசாத், தனது அடியாட்களுடன் வந்து படேல் நகரில் உள்ள எனது இடத்தில் தடுப்புசுவர் கட்ட தொடங்கியுள்ளனர்.

இதற்கு நாங்கள் ஆட்சேபம் தெரிவித்தபோது, எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். பின்னர், என்னையும், எனது உறவினர்களையும் பாட்னாவில் உள்ள துணை முதல்வர் ரேணு தேவியின் வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு அவரது கூட்டாளிகளிடம் தெரிவித்தார்’ என்றார். மேலும், இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இது, பீகார் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து துணை முதல்வர் ரேணு தேவி கூறுகையில், ‘கடந்த ஐந்து ஆண்டுகளாக என் சகோதரருடன், எனக்கு எந்த உறவும் இல்லை. இந்த விசயத்தில் ஏன் என் பெயரை இதில் இழுக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை.

இந்த சர்ச்சையில், என்னுடைய பெயரை இழுத்துவிட்ட பிரம்மானந்த் சிங்கிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பேன். கடந்த 42 ஆண்டுகளாக மக்கள் பிரதிநிதியாக உள்ளேன். இதுவரை எந்த சர்ச்சையையிலும் சிக்கவில்லை. தற்போது புகார் அளித்துள்ள பிரம்மானந்த் சிங் கடந்த சில நாட்களுக்கு முன் என் வீட்டிற்கு வந்தார். அப்போது நான் அங்கு இல்லாததால், என்னை அவர் சந்திக்கவில்லை. இருப்பினும், இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளேன். பிரச்னைக்குரிய இடத்தில் நிலத் தகராறு இருப்பது உண்மை. ஆனால், நில அபகரிப்பு ஏதும் நடக்கவில்லை’ என்றார்.


Tags : Bihar ,Pajka , Echo of land grab complaint against brother; We have not had an Otto-relationship for 5 years: BJP Deputy Chief Minister screams
× RELATED பீகார் மாநிலத்தில் கிரேன் மீது ஆட்டோ மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!