மக்களவை காங்கிரஸ் தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பதவி பறிப்பு?.. சோனியா காந்தி தீவிர ஆலோசனை

புதுடெல்லி: மக்களவை காங்கிரஸ் தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு பதிலாக, சசி தரூர் அல்லது மணிஷ் திவாரி  ஆகியோரில் ஒருவரை நியமிக்க சோனியா காந்தி ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் மூத்த தலைவரும், மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த எம்பியுமான  ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மேற்குவங்க மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் தலைவராக  செயல்பட்டு வருகிறார். மேலும், நாடாளுமன்ற மக்களவை காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் உள்ளார். நடந்து முடிந்த மேற்குவங்க மாநில தேர்தலில் அவர் கவனம் செலுத்தி வந்த நிலையில், கட்சியின் தலைவர் தேர்வு குறித்து கடந்த சில நாட்களுக்கு முன் அதிருப்தியை வெளிப்படுத்தி ஜி-23 தலைவர்களுக்கு எதிராக தனது கருத்தை தெரிவித்தார்.

மேலும், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாவுக்கும், கட்சி தலைமைக்கும் பின்னால் உறுதியாக நின்றார். பல்வேறு பதவிகளில் வகித்துவரும், பொதுக் கணக்குக் குழுவின் தலைவராகவும் உள்ளார். இந்நிலையில், மக்களவை காங்கிரஸ் தலைவர் பதவியை ஆதிர் ரஞ்சன் சவுத்ரியிடம் இருந்து பறித்து, மற்றவர்களுக்கு கொடுக்க சோனியாக காந்தி முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த பட்டியலில், திருவனந்தபுரம் எம்பி சசி தரூர், ஆனந்த்பூர் சாஹிப் எம்பி மணிஷ் திவாரி ஆகியோர் உள்ளனர். இவர்கள் இருவரும் 23 மூத்த தலைவர்கள் சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில் கையெழுத்திட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு எம்பியுமான ராகுல் காந்தியை மக்களவை காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யவும் ஆலோசனைகள் நடப்பதாக கூறப்படுகிறது. மக்களவையில் காங்கிரஸ் கட்சிக்கு 52 உறுப்பினர்கள் மட்டுமே உள்ள நிலையில், மக்களவை காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ராகுல் ஏற்பாரா? என்பது தெளிவாகத் தெரியவில்லை. நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் 19ம் தேதி தொடங்கப்பட உள்ள நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியில் அதிரடி மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: