×

உத்தராகண்ட் முதல்வராக பதவியேற்றார் புஷ்கர் சிங் தாமி: 45 வயதான இவர் மாநிலத்தின் மிக இளம் முதல்வர் என்ற பெருமையை பெற்றுள்ளார்

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்றுக் கொண்டார். உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 4 ஆண்டாக பாஜக முதல்வராக இருந்த திரிவேந்திர சிங் ராவத் பதவி விலகியதையடுத்து, கடந்த மார்ச் மாதம் மக்களவை எம்பியான தீரத் சிங் ராவத் முதல்வராக பதவியேற்றார். இவர் பதவியேற்று 6 மாதத்திற்குள் எம்எல்ஏவாக தேர்வாக வேண்டும் என்ற நிலையில், அம்மாநிலத்தில் கொரோனா பரவல் காரணம் மற்றும் உட்கட்சி பூசல்களால் அவரது பதவிக்கு சிக்கல் ஏற்பட்டது. அதனால், அவர் தனது பதவியில் விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

மாநில ஆளுநர் பேபி ராணி மவுரியாவை சந்தித்து நேற்று முன்தினம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். இந்நிலையில் டேராடூனில் பாஜகவின் மத்திய பார்வையாளர் நரேந்திர சிங் தோமர் முன்னிலையில் நேற்று மாலை நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், எம்எல்ஏ புஷ்கர் சிங் தாமி கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவர் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். ஆளுநரின் அழைப்பையடுத்து தாமி தற்போது பதவியேற்றுக் கொண்டார். உத்தராகண்ட் ஆளுநர் பேபி ராணி மௌரியா, புதிய முதல்வர் புஷ்கர் சிங் தாமிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

45 வயதான இவர் மாநிலத்தின் மிக இளம் முதல்வர் என்ற பெருமையை பெற்றுள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் நான்கு மாதங்களுக்குள் மீண்டும் ஒரு புதிய முதல்வர் பதவியேற்றுள்ளார். இவர், அடுத்த எட்டு மாதங்களுக்கு முதல்வராக இருப்பார். இதற்கிடையே, மாநிலத்தில் அடுத்தாண்டு தொடக்கத்தில் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Uttarakhand ,Pushkar Singh Tami , Pushkar Singh Thami sworn in as Uttarakhand Chief Minister: The 45-year-old is the youngest Chief Minister of the state.
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்