×

கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு: கோவையில் 30 பேர் ஒரு கண் பார்வை இழப்பு

கோவை: கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா கூறியதாவது: கோவை அரசு மருத்துவமனையில் இதுவரை கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கு 264 பேர் அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் எண்டோஸ்கோபி செய்யப்பட்டது. இதில் 110 பேருக்கு எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. தீவிர நோய்த் தொற்று பாதிப்புடன் வந்த 30 பேர் ஒரு கண் பார்வையை இழந்துள்ளனர். இதில் ஒரு சிலருக்கு கண் அகற்றப்பட்டுள்ளது. ஆரம்ப நிலையில் வந்த அனைவருக்கும் உரிய சிகிச்சை அளித்ததன் மூலம் குணமடைந்துள்ளனர்.

எனவே அலட்சியமாக இல்லாமல் மூக்கடைப்பு, மூக்கில் இருந்து சளியுடன் ரத்தம் கலந்து வருதல், கண் வீக்கம், முக வீக்கம், கண் சிவப்பாக மாறுதல், தலைவலி, பல்வலி போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். மூக்கு வழியாக செல்லும் இந்த நோய்த் தொற்று சைனஸ் வழியாக கண்ணிற்கு சென்று கண் பாதிக்கப்படுகிறது. அதேபோல் கண் வழியாக மூளையில் பாதிப்பை ஏற்படுத்தி உயிர் இழப்பு வரை ஏற்படுகிறது. இதனால் நோய்த் தொற்றின் ஆரம்ப நிலையில் சிகிச்சை எடுத்துக்கொண்டால் கண் பார்வை இழப்பு, உயிரிழப்பு போன்றவற்றை தவிர்க்க முடியும்.

கருப்பு பூஞ்சை நோய்த் தொற்றுக் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை. முகக்கவசம் அணிவதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். மூக்கு வழியாகவே இந்நோய்த் தொற்று பரவுவதால் முகக்கவசம் அணிவதன் மூலம் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். இவ்வாறு நிர்மலா கூறினார்.

Tags : Outbreaks appear to be exacerbated during pregnancy and in children
× RELATED மாணவர்கள், நோயாளிகள் நலன் கருதி ரயில்...