திருமண ஆசை வார்த்தை கூறி மதுரை சிறுமியை சென்னை கடத்தி வந்து கர்ப்பமாக்கிய ரவுடி போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த தாயும் சிக்கினார்

தண்டையார்பேட்டை: மதுரை சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சென்னை கடத்தி வந்து கர்ப்பமாக்கிய பிரபல ரவுடி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மகனுக்கு உடந்தையாக இருந்த தாயும் சிக்கினார். சென்னை காசிமேடு காசிபுரம் ஏ.பிளாக் பகுதியை சேர்ந்தவர் லோகேஷ் என்ற தேசப்பன் (21). பிரபல ரவுடியான இவர் மீது 2 கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் சென்னை காவல்நிலையங்களில் நிலுவையில் உள்ளன. இவர், ஆண்டுதோறும் சபரிமலை கோயிலுக்கு செல்வது வழக்கம். அங்கு தரிசனம் முடிந்து திரும்பும்போது மதுரையில் உள்ள மீனாட்சியம்மன் கோயிலுக்கு செல்வாராம்.

அப்போது, கோயில் முன்பு பூக்கடை வைத்துள்ள மூதாட்டி, அவரது பேத்தியுடன்  தேசப்பனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், மதுரைக்கு செல்லும்போதெல்லாம்  தேசப்பன், 17 வயது சிறுமியை சந்தித்து பேசி வந்துள்ளார்.  சிறுமியின் பெற்றோர் மலேசியாவில் பூ வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தன்னை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசைவார்த்தை கூறி கடந்த ஆண்டு காசிமேடு பகுதிக்கு சிறுமியை அழைத்து வந்துள்ளார். பின்னர், இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சிறுமி 5 மாத கர்ப்பிணியானார். இவர்கள் மீது சந்தேகமடைந்த  அப்பகுதி மக்கள், குழந்தைகள் நல அமைப்புக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி நேற்று  அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்துவிட்டு, ராயபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, 17 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி மதுரையில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்து கர்ப்பமாக்கியது தெரியவந்தது. இதையடுத்து, சிறுமியை மீட்டு மயிலாப்பூரில் உள்ள காப்பகத்தில்  ஒப்படைத்தனர். தேசப்பனை போக்சோ சட்டத்தில் கைது  செய்து மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல்சிறையில் அடைத்தனர்.  மகனுக்கு உடந்தையதாக இருந்ததாக தேசப்பனின் தாய் கீதா (40) என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.  இந்த சம்பவம் காசிமேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories:

>