×

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 70 நாட்களுக்கு பிறகு நாளை முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், 70 நாட்களுக்கு பிறகு மீண்டும் நாளை முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். அதையொட்டி, கோயிலில் சீரமைப்பு பணிகள் நடந்தது. மேலும் வரும் 7ம் ேததி ஆனி பிரமோற்சவ கொடியேற்றம் நடக்கிறது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது. முதல் அலையின் தாக்கம் குறைந்த பிறகு, ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, கோயில்களில் நடைபெறும் வழிபாடுகளில் பங்கேற்க, தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர், கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்ததால், கடந்த ஏப்ரல் 26ம் தேதி முதல் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய மீண்டும் தடை விதிக்கப்பட்டது.

அதனால், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் வேதனை அடைந்தனர். ஆனாலும், கோயிலில் வழக்கமாக நடைபெறும் 6 கால பூஜைகள் மற்றும் வழிபாடுகள் மட்டும் தடையின்றி நடந்து வந்தது. இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் தற்போது கட்டுக்குள் வந்திருப்பதால், ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், கொரோனா விழிப்புணர்வு கட்டுப்பாடுகளுடன் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 70 நாட்களுக்கு பிறகு மீண்டும் அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய நாளை முதல் அனுமதிக்கப்படுகின்றனர். அதையொட்டி, கோயில் பிரகாரங்களை தூய்மை செய்து, சீரமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. மேலும், வரும் 7ம் தேதி தட்சணாயன புண்ணியகாலம் எனப்படும் ஆனி பிரமோற்சவ கொடியேற்றம் நடக்கிறது.

எனவே, கோயிலில் தங்க கொடிமரத்தை தூய்மைப்படுத்தி சீரமைத்தனர். இந்நிலையில், அண்ணாமலையார் கோயிலில் நாளை முதல் ராஜகோபுரம் வழியாக மட்டும் பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்கவும், தரிசனம் முடிந்ததும் பே கோபுரம் வழியாக வெளியே செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுவாமி சன்னதி, அம்மன் சன்னதியில் மட்டுமே தரிசனம் செய்ய தற்போது அனுமதிக்கப்படுகிறது. கோயிலின் மற்ற பிரகாரங்களுக்கு செல்ல அனுமதியில்லை. அதையொட்டி, தனி நபர் இடைவெளியை பின்பற்ற வசதியாக பக்தர்கள் வரிசையில் நிற்பதற்கான அடையாள குறியீடுகள் வரையப்பட்டுள்ளன. சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டு, ஒருவழிப்பாதை விரைவு தரிசன முறை அமல்படுத்தப்படுகிறது. மேலும், ராஜகோபுரம் நுழைவு வாயிலில் கைகளை தூய்மை செய்ய தானியங்கி கிருமி நாசினி இயந்திரம், உடல் வெப்ப பரிசோதனை செய்தல் உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்படுகிறது. பக்தர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என்பதற்கான விழிப்புணர்வு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

Tags : Annamalaiyar Temple ,Thiruvannamalai , Devotees will be able to visit the Thiruvannamalai Annamalaiyar Temple from tomorrow after 70 days
× RELATED அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜை...