கோத்தகிரி அருகே வனத்துறை கூண்டில் சிக்கிய கரடி அடர்ந்த வனப்பகுதியில் விடுவிப்பு

கோத்தகிரி: கோத்தகிரி பகுதியில் கடந்த ஒரு மாதமாக வனத்துறைக்கு போக்கு காட்டிய கரடி,நேற்று கூண்டில் சிக்கியது. நீலகிரி  வனக்கோட்டம், கோத்தகிரி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில  ஆண்டுகளாக கரடிகள் தொல்லை இருந்து வருகிறது. அவ்வப்போது தொல்லை செய்யும்  கரடிகளை, வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து வேறு வனப்பகுதியில்  விடுவிப்பது வழக்கம். கோத்தகிரி வனச்சரகத்திற்கு உட்பட்ட மிளிதேன்  கிராமம் உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து  வருகிறார்கள்.

தேயிலை தோட்டம் மற்றும் வனப்பகுதியை ஒட்டியுள்ள  இக்கிராமத்திற்கு கரடி ஒன்று கடந்த ஒரு மாத காலமாக உலா வந்து பயிர்களை  சேதப்படுத்தி வந்தது. தொழிலாளர்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டது.  இதனால் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வனத்துறை  அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். இதைத்தொடர்ந்து கடந்த மே மாதம்  மிளிதேன் பகுதியில் வனத்துறை ஊழியர்கள் கூண்டு வைத்து, கண்காணித்து  வந்தனர். இருப்பினும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கூண்டில் சிக்காமல்  கரடி போக்குகாட்டி வந்தது.

இந்நிலையில் நேற்று அதிகாலை அட்டகாசம் செய்த  அந்த கரடி, கூண்டுக்குள் சிக்கியது. கூண்டில் அடைபட்ட கரடி, கூண்டை அடித்து  உடைத்து சேதப்படுத்தி தப்பிக்க முயன்றது. இதுபற்றி தகவல் அறிந்த  வனத்துறையினர் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து சென்று, கரடி கூண்டில்  இருந்து தப்பிக்காமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்தனர்.

வேறு கூண்டு வரவழைத்து, அதில் கரடியை மாற்றி, மஞ்சூர் அருகே கோரகுந்தா பகுதியில் அடர்ந்த வனத்தில் விடுவித்தனர். ஏற்கனவே கோத்தகிரி பகுதியில் 3 கரடிகள் பிடிக்கப்பட்டு, வேறு பகுதியில் விடப்பட்டுள்ளது. தற்போது பிடிபட்டது 4வது கரடி ஆகும்.

Related Stories:

More