×

ஊரடங்கு அமலில் உள்ளதால் சிதம்பரம் நடராஜர் கோயிலில் திருவிழா நடத்த அனுமதி இல்லை: சார் ஆட்சியர் தகவல்

சிதம்பரம்:  தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதால், சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா நடத்த அனுமதி இல்லை என்று, சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன் தெரிவித்தார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், உலக புகழ்பெற்ற நடராஜர் கோயில் உள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கும் இந்த கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன விழாவும், ஆனி மாதத்தில் ஆனித்திருமஞ்சன திருவிழாவும் நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாக்களில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆனி திருமஞ்சன திருவிழா கொடியேற்றம் நாளை மறுநாளும், 14ம் தேதி தேரோட்டம், 15ம் தேதி ஆனித்திருமஞ்சன தரிசன விழாவும் நடைபெறும் என்று, கோயில் தீட்சிதர்கள் சார்பில் அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பான ஆலோசனை கூட்டம் சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில், சார் ஆட்சியர் மதுபாலன் தலைமையில் நேற்று நடைபெற்றது. சிதம்பரம் டிஎஸ்பி ரமேஷ்ராஜ், ஆணையாளர் அஜிதா பர்வீன் மற்றும் பல்வேறு துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள தீட்சிதர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து சார் ஆட்சியர் மதுபாலன் கூறுகையில் தமிழகத்தில் 11ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதால் சிதம்பரம் நடராஜர் கோயில் திருவிழா நடத்த அனுமதி இல்லை. அதன்பிறகு கோயில்களில் திருவிழாக்கள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டால், 14ம் தேதி தேரோட்டமும், 15ம் தேதி ஆனித்திருமஞ்சன தரிசன விழாவும் நடத்த அனுமதி அளிப்பது குறித்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.

Tags : Chittambaram Nataraja , No permission to hold festival at Chidambaram Natarajar Temple as curfew is in force: Sir Collector Information
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித்...