×

நெல்லிக்குப்பம் ஆர்ஐ அலுவலகம் திறப்பு

திருப்போரூர்: காஞ்சிபுரம் மாவட்டமாக இருந்தபோது திருப்போரூர் ஒன்றியம் செங்கல்பட்டு வட்டத்துடன் இணைந்து இருந்தது. கடந்த 2012ம் ஆண்டு செங்கல்பட்டு வட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு திருப்போரூர் தனி வட்டமாக உருவாக்கப்பட்டது. அப்போது திருப்போரூரில் கூடுதல் குறு வட்டங்கள் உருவாயின.
அதில், நெல்லிக்குப்பம் தனி குறுவட்டமாக அறிவிக்கப்பட்டு, வருவாய் ஆய்வாளர் நியமிக்கப்பட்டார். வருவாய் ஆய்வாளருக்கு நெல்லிக்குப்பம் பிரதான கிராமத்தில் கடந்த 2014ம் ஆண்டு குடியிருப்புடன் கூடிய அலுவலக கட்டிடம் கட்டப்பட்டது. புதிய கட்டிடம் கட்டப்பட்டு ஒப்படைக்கப்பட்டாலும், இதுவரை எந்த அதிகாரியும் அந்த கட்டிடத்தை பயன்படுத்தவில்லை. இதனால் இந்த புதிய கட்டிடம் பயன்படுத்தாமல், பாழானது. தற்போது வரை கிராம நிர்வாக அலுவலரின் பழைய அலுவலக கட்டிடத்தையே வருவாய் ஆய்வாளர், தனது அலுவலகமாக பயன்படுத்தி வருகிறார்.

 10க்கும் மேற்பட்ட கிராமங்களின் விஏஓக்கள் மற்றும் பொதுமக்கள் நெல்லிக்குப்பம் வருவாய் ஆய்வாளரை சந்திக்கும்போது இட நெருக்கடி ஏற்படுகிறது. இதனால், கட்டி முடித்த புதிய வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடத்தை பயன்படுத்த வேண்டும் என கடந்த மே மாதம் 15ம் தேதி தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து திருப்போரூர் வட்டாட்சியர் ரஞ்சனி, அந்த கட்டிடத்தை பார்வையிட்டு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும், அப்பணிகள் முடிந்ததும் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை திறந்து பணிகளை தொடங்கவும் உத்தரவிட்டார். அதன்படி கட்டிடப் பராமரிப்பு பணிகள் முடிந்து நேற்று நெல்லிக்குப்பம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் பயன்பாட்டுக்கு வந்தது. இதையொட்டி, நெல்லிக்குப்பம் கிராம மக்கள் தினகரன் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.


Tags : Nellikuppam RI Office Opening
× RELATED மோடியின் ஆதிக்கத்தில் இருந்து நாடு...