4வது சுற்றில் 338வது ரேங்க் வீராங்கனை! 18 வயது எம்மா அசத்தல்

விம்பிள்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் விளையாட, இங்கிலாந்து வீராங்கனை எம்மா ரடுகானு தகுதி பெற்று அசத்தியுள்ளார். விம்பிள்டனில் ‘வைல்டு கார்டு’ சிறப்பு அனுமதியுடன் களமிறங்கிய எம்மா ரடுகானு (18 வயது), உலக தரவரிசையில் 338வது இடத்தில் உள்ளார். தான் விளையாடும் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடரிலேயே அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வரும் எம்மா, நேற்று தனது 3வது சுற்றில் ருமேனியாவின் சொரானா சிர்ஸ்டீயுடன் (31 வயது, 45வது ரேங்க்) மோதினார். விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் அவர் 6-3, 7-5  என்ற நேர் செட்களில் வென்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 40 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.

4வது சுற்றில் ஆஸ்திரேலியாவின் அஜ்லா டாம்ஜனோவிச்சுடன் எம்மா மோதுகிறார். இங்கிலாந்து நட்சத்திரம் ஆண்டி மர்ரேவின் மாமனார் நிகல் சீயர்ஸ் தான் இவரது பயிற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னணி வீராங்கனைகள் கோகோ காப் (அமெரிக்கா), ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) ஆகியோரும் 4வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். மகளிர் இரட்டையர் 2வது சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா - பெதானி மேட்டக் சேண்ட்ஸ் (யுஎஸ்) ஜோடி போராடி தோற்றது.

Related Stories: