யூரோ கோப்பை கால்பந்து: அரையிறுதியில் இத்தாலி, ஸ்பெயின்

மியூனிக்: யூரோ கோப்பை கால்பந்து தொடரின்  அரையிறுதி போட்டிக்கு 6வது முறையாக இத்தாலியும், 5வது முறையாக ஸ்பெயினும் முன்னேறியுள்ளன. யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடந்த 2வது கால் இறுதியில்  பெல்ஜியம் - இத்தாலி அணிகள் மோதின. லீக் சுற்று முதல் அசத்தி வரும் இந்த இரு அணிகளும் நேற்றும் வெற்றிக்கு வேகம் காட்டின.  ஆட்டத்தின் முதல் பாதியிலேயே இரு அணிகளும் கோலடித்தன. இத்தாலி வீரர்கள்   நிகோலோ பிரெல்லா 31வது நிமிடத்திலும்,  லாரன்ஸ்  இன்சிக்னே 44வது நிமிடத்திலும்  கோல்  அடித்து அணிக்கு முன்னிலை தந்தனர். முதல் பாதியில் கடைசி நிமிடத்தில்  கிடைத்த பெனால்டி வாய்ப்பை  பெல்ஜியம் நட்சத்திரம் ரொமேலு லூக்காகு  கோலாக்கி முன்னிலையை குறைத்தார்.

தொடர்ந்து 2வது பாதியில் எந்த அதிசயமும் நடக்காததால்  இத்தாலி 2-1 என்ற கோல் கணக்கில் வென்று  6வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது. முன்னதாக நடந்த முதல் காலிறுதியில் சுவிட்சர்லாந்து - ஸ்பெயின் அணிகள் களம் கண்டன.  ஆட்டம் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் அணிக்கான முதல் கோலை 8வது நிமிடத்தில்  சுவிட்சர்லாந்தின்  டெனிஸ் சகாரியா சுய கோலாக அடித்தார். அதனால்  ஸ்பெயின் முதல் பாதியில் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து 2வது பாதியில்  சுவிட்சர்லாந்தின் ஸெர்டன் ஷகிரி 68வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டு வந்தார்.

அதன் பிறகு 77வது நிமிடத்தில் முரட்டு ஆட்டம்  ஆடியதற்காக சுவிஸ் வீரர்  ரெமோ சிவப்பு அட்டை காட்டி வெளியேற்றப்பட்டார்.

அதனால் அந்த அணி 10 வீரர்களுடன் விளையாடிய போதும் ஸ்பெயினால்  கோல் அடிக்க முடியவில்லை. பந்தை 73சதவீதம் தன்  கையில் வைத்திருந்த ஸ்பெயின் 28முறை கோல் அடிக்க முயற்சி மேற்கொண்டும்  பலனில்லை. அதனால்  ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. கூடுதலாக வழங்கப்பட்ட 30 நிமிடத்திலும் கோல் ஏதும் விழவில்லை. இதைத் தொடர்ந்து பெனால்டி ஷூட் அவுட் கடைப்பிடிக்கப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா 5 முறை கோலடிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதில் ஸ்பெயின் 3-1 என்ற கோல் கணக்கில் வென்று 5வது முறையாக அரையிறுதிக்குள் நுழைந்தது. ஜூலை 7ம் தேதி நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலி - ஸ்பெயின் அணிகள் மோத உள்ளன.

Related Stories:

More
>