×

செல்போன் சிக்னல் கிடைப்பதில் சிக்கல் ஆன்லைன் வகுப்புக்காக ஆலமரம் ஏறும் மாணவர்கள்: நாமகிரிப்பேட்டை அருகே அவலம்

நாமகிரிப்பேட்டை:  நாமகிரிப்பேட்டை அருகே, செல்போன் சிக்னல் கிடைக்காததால் ஆலமரத்தில் ஏறி உட்கார்ந்து, மாணவ- மாணவிகள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் நிலை உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் ஆன்லைன் வகுப்புகளே நடக்கிறது. கிராமப்புற மாணவர்கள் அனைவரிடத்திலும் செல்போன் இருப்பதில்லை. அப்படியே செல்போன் இருந்தாலும், அவர்கள் வசிப்பிடத்தில் சிக்னல் கிடைப்பது குதிரை கொம்பாக உள்ளது. இதனால், மாணவ, மாணவிகள் தவித்து வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தின் கடைகோடி பகுதியான நாமகிரிப்பேட்டை மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களில் பெரும்பாலானோர், அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனர். இவர்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் வகுப்புகளில் முழு கவனம் செலுத்தி வரும் நிலையில், செல்போன் சிக்னல் பிரச்னையால் தவியாய் தவித்து வருகின்றனர். மாணவர்கள் மட்டுமின்றி மாணவிகளும் சிக்னல் கிடைக்கும் இடமாக தேடிச் சென்று, ஊருக்கு அருகில் உள்ள மரங்களில் ஏறி உட்கார்ந்து பாடங்களை கவனிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

நாமகிரிப்பேட்டை அடுத்த முள்ளுக்குறிச்சி, பெரப்பஞ்சோலை மற்றும் பெரியகோம்பை கிராமங்களில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களில் செல்போன் டவர்கள் இல்லை. எனவே, சிக்னல் சரியாக கிடைக்காததால் ஊருக்கு அருகே உள்ள உயரமான ஆலமரங்களில் மாணவர்கள் தஞ்சமடைந்து வருகின்றனர். குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே ஆலமரத்தின் மீது ஏறி கிளைகளில் அமர்ந்து கொள்ளும் மாணவ- மாணவிகள், ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று பாடம் படித்து வருகின்றனர். உயிரை பணயம் வைத்து உயரமான மரங்களில் ஏறி ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பது மாணவ- மாணவியரின் பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மாணவர் நலன் கருதி, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் செல்போன் டவர் அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Namagiripettai , Problems with cell phone signal availability
× RELATED நாமகிரிப்பேட்டை அருகே பரபரப்பு...