ரூ.59 ஆயிரம் கோடி ரபேல் விமான பேர ஊழல் நீதி விசாரணைக்கு பிரான்ஸ் உத்தரவு: தனி நீதிபதி நியமித்து அதிரடி

புதுடெல்லி: இந்தியாவுடன் செய்யப்பட்ட ரபேல் போர் விமானம் கொள்முதல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக ஆதாரங்களுடன் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டதை தொடர்ந்து, இந்த ஒப்பந்தம் பற்றி நீதி விசாரணை நடத்த பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக,  தனி நீதிபதியும் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதனால், ரபேல் ஒப்பந்த விவகாரம் மீண்டும் சூடு  பிடித்துள்ளது. நாட்டின் விமானப்படையை பலப்படுத்துவதற்காக பிரான்சிடம் இருந்து ரபேல் ரக போர் விமானங்களை வாங்குவதற்காக, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது ஒப்பந்தம் செய்யப்பட்டது.

அப்போது, ஒரு விமானத்தின் விலை ரூ.526 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. பின்னர், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி பொறுப்பேற்றது. பிரதமராக மோடி பதவியேற்றார். இந்த ஆட்சி ஏற்பட்டதும், பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரனுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு விமானத்தின் விலை ரூ.1,607 கோடி என்ற அடிப்படையில், ரூ.59 ஆயிரம் மோடிக்கு 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மறுஒப்பந்தம் செய்யப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டியது. 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இந்த குற்றச்சாட்டுகளை மத்திய அரசு நிராகரித்தது. அதன் பிறகு, இந்த பிரச்னை ஓய்ந்து விட்டது. விமானங்களும் தயாரிக்கப்பட்டு, இந்தியாவிடம் இதுவரையில் 10க்கும் மேற்பட்ட ரபேல் விமானங்கள் ஒப்படைக்கப்பட்டு விட்டன. இந்நிலையில், பிரான்சை சேர்ந்த புலனாய்வு இதழான ‘மீடியாபார்ட்’, ரபேல் ஒப்பந்தத்துக்காக இந்திய தரகருக்கு பல கோடி ரூபாய் லஞ்சமாக கொடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டியது. அதற்கான ஆதாரங்களுடன் கடந்த ஏப்ரலில் செய்தி வெளியிட்டது. மேலும், பிரான்சை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான ‘ஷெர்பா’வும், இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அரசை வலியுறுத்தியது. இதனால், அதிபர் மேக்ரனுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

இதையடுத்து, ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான, தனி நீதிபதியையும் நியமித்துள்ளது. இது பற்றி ‘மீடியாபார்ட்’ வெளியிட்டுள்ள செய்தியில், ‘2016ம் ஆண்டு இந்தியா - பிரான்ஸ் இடையே கையெழுத்தான ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக சந்தேகம் நிலவுவதால், அது குறித்து நீதி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. கடந்த மாதம் 14ம்  தேதியே இதற்கான விசாரணை தொடங்கியது. விசாரணைக்காக பிரான்ஸ் நீதிபதி நியமிக்கப்பட்டு உள்ளார். பிரான்சின் தேசிய நிதி குற்றப்பிரிவு அலுவலகமும், இது தொடர்பான விசாரணையை தொடங்கி உள்ளது,’ என கூறியுள்ளது. இதனால், அடங்கி கிடந்த இந்த ஒப்பந்தம் பற்றிய சர்ச்சை மீண்டும் சூடுபிடித்துள்ளது.

* போட்டி நிறுவனங்களின் கைப்பாவை

டெல்லியில் பாஜ செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா அளித்த பேட்டியில், ‘‘ராகுல் காந்தியின் நடவடிக்கையை பார்க்கையில், ரபேலை தயாரிக்கும் டசால்ட் நிறுவனத்துக்கு எதிரான போட்டி நிறுவனங்களின் கைப்பாவையாக அவர் பயன்படுத்தப்படுகிறார் என்று கூறினால் அது மிகையாகாது. இந்த விவகாரத்தில் அவர் ஆரம்பத்தில் இருந்தே பொய் கூறி வருகிறார். அவர் ஏஜென்டை போன்று அல்லது போட்டி நிறுவனத்தில் இருக்கும் காந்தி குடும்பத்தை சேர்ந்த நபர் போல நடந்து கொள்கிறார். ராகுலும், அவரது கட்சியும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருவது நாட்டை வலுவிழக்க செய்யும் முயற்சியாகும். ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பொய் மற்றும் தவறான தகவல்களை காங்கிரஸ் பரப்பி வருகிறது. பிரான்ஸ் தன்னார்வ தொண்டு நிறுவனம் கூறிய புகாரை பற்றி விசாரணைக்கவே, பிரான்ஸ் அரசு தனி நீதிபதியை நியமித்துள்ளது. இதை ஊழல் விவகாரமாக பார்க்கக் கூடாது,’’ என்றார்.

* கூட்டுக்குழு விசாரணை காங்கிரஸ் வலியுறுத்தல்

காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா நேற்று அளித்த பேட்டியில், ‘‘ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்தது தற்போது தெளிவாக தெரிகிறது. இந்த ஒப்பந்தம் குறித்து நீதி விசாரணை நடத்த பிரான்ஸ் அரசு உத்தரவிட்டதன் மூலம், காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தி ஆகியோரின் குற்றச்சாட்டு நிரூபணமாகி உள்ளது. இதுதொடர்பாக, நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இது, காங்.-பாஜ மோதல் கிடையாது. இது நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விவகாரம்,’’ என்றார்.

* நாடாளுமன்றத்தில் அனல் பறக்கும்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 19ல் தொடங்குகிறது. ஏற்கனவே, தடுப்பூசி தட்டுப்பாடு, பொருளாதார சீர்குலைவு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்ற பல்வேறு பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. ரபேல் முறைகேடு விவகாரமும் வெடித்து இருப்பதால், நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அனல் பறக்கும்.

Related Stories: