×

98 நாடுகளில் பரவியுள்ள டெல்டா வைரஸ்: உலக சுகாதார அமைப்பு தகவல்

மாஸ்கோ: டெல்டா வகை கொரோனா வைரஸ் 98 நாடுகளில் பரவி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. கொரோனா ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை இறங்குமுகமாக இருந்த பல நாடுகளிலும் தற்போது அதிகரிக்க தொடங்கிவிட்டது. இதை இந்தியாவுக்கான எச்சரிக்கையாகவும் எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது.

ரஷ்யாவில் கடந்த ஜனவரி மாதத்திற்கு பிறகு இன்று அங்கு அதிக அளவு பாதிப்பு பதிவாகியுள்ளது. அங்கு 24 மணி நேரத்தில் 24,439 பேர் புதிதாக தொற்றுக்கு உள்ளாகி இருக்கின்றனர். ஒரு மாதத்திற்கு முன்பு வரை தொற்று இல்லாத நாடாக இருந்த இஸ்ரேலில் கடந்த சில நாட்களாக நாள்தோறும் 300 தொற்றுகள் வரை பதிவாகின்றன. 10 நாட்களுக்குள் ஒருநாள் பாதிப்பு 10,000ஆக உயர்ந்துவிடும் என்று அஞ்சப்படுகிறது.

இங்கிலாந்திலும் ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை 26,000க்கும் அதிகமாக பதிவாகிறது. ஆப்கானிஸ்தானில் ஜூன் மாதத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டது. தலைநகர் காபூலில் 60% பாதிப்பு டெல்டா வகை கொரோனாவால் ஏற்பட்டது என்று அந்நாட்டு சுகாதாரத்துறை கூறியுள்ளது.

வங்கதேசத்தில் மே மாதத்தின் பிற்பகுதியில் இருந்து தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. மே 25 முதல் ஜூன் 7 வரை தலைநகர் டாக்காவில் பதிவான 68% தொற்று பாதிப்புக்கு டெல்டா வகையே காரணம் என்று கூறப்பட்டுள்ளது. இந்தோனேசியாவிலும் கடந்த 3 வார காலமாக தொற்று அதிகரிப்பதை அடுத்து வரும் 20ஆம் தேதி வரை அங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை தலைநகர் கொழும்பு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் புதிதாக 5 பேருக்கு டெல்டா வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நாடுகளில் பதிவாகும் தொற்றுகளில் 60 விழுக்காட்டிற்கும் மேல் டெல்டா வகை வைரசால் ஏற்படுவதும் தெரிய வந்திருக்கிறது. இந்தியாவிலும் ஒருநாள் தொற்று இறங்குமுகமாக இருந்து வந்தாலும் மற்ற நாடுகளை ஒப்பிடும் போது அடுத்த அலைக்கான சாத்தியங்களும் வாய்ப்புகளும் நெருங்கி கொண்டிருப்பதாகவே பார்க்கப்படுகிறது.



Tags : World Health Organization , corona
× RELATED உலக சுகாதார நிறுவனம் தகவல்...