×

மேற்குவங்க அரசியல் களேபரத்துக்கு மத்தியில் போலீஸ் கமிஷனரின் நெஞ்சை தொட்ட இசை: வயலின் கலைஞரை வரவழைத்து கவுரவிப்பு

கொல்கத்தா: மேற்குவங்க அரசியல் களேபரத்துக்கு மத்தியில் கொல்கத்தா போலீஸ் கமிஷனர், வயலின் இசைக்கலைஞரை அலுவலகத்திற்கு வரவழைத்து புதிய வயலினை பரிசாக வழங்கினார். மேற்குவங்க மாநிலத்தில் முதல்வர் மம்தாவுக்கும், அம்மாநில ஆளுநருக்கும் இடையே நடக்கும் தினசரி கருத்து மோதலுக்கு மத்தியில், கொல்கத்தாவை சேர்ந்த வயலின் கலைஞர் பகவான் மாலி என்பவர், பாலிவுட் பாடல்களை தனது வயலின் மூலம் இசைத்து மக்களை கவர்ந்தார்.

குறிப்பாக, ‘தீவானா ஹுவா’, ‘அஜீப் தஸ்தான் ஹை யே’ போன்ற பசுமையான பாலிவுட் பாடல்களை தெருவில் அவர் வயலின் வாசிக்கும் வீடியோ கடந்த மாதம் டுவிட்டரில் வைரலானது. இவரது, ஆத்மார்த்தமான இசையை ரசித்த சமூக தளவாசிகள், வெகுவாக பாராட்டினர். இந்நிலையில், பாலிவுட் பாடல்களை வயலின் மூலம் வாசித்து மக்களை மெய்மறக்கச் செய்த கொல்கத்தா கலைஞர் பகவான் மாலியை, கொல்கத்தா போலீஸ் கமிஷனர் சவுமன் மித்ரா மிகவும் பிடித்துவிட்டது.

அவருக்கு ஏதாவது உதவி செய்தாக வேண்டும் என்று நினைத்த போலீஸ் கமிஷனர், பகவான் மாலியை தனது அலுவலகத்திற்கு வரவழைத்து புதிய ஒரு வயலின் இசைக்கருவியை பரிசாக கொடுத்தார். பின்னர், அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட போலீஸ் கமிஷனர், தங்களது அதிகாரபூர்வ டுவிட்டவர் பக்கத்தில் அதனை பகிர்ந்துள்ளது. அதில், ‘மிகவும் திறமையான இசைக்கலைஞரான பகவான் மாலி, போலீஸ் கமிஷனர் சவுமன் மித்ராவை சந்தித்தார்.

அவர், சில வாரங்களுக்கு முன்பு, நகர வீதிகளில் தனது வயலின் மூலம் பாலிவுட் பாடல்களை வாசிக்கும் வீடியோ மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனால், போலீஸ் சார்பில் அவருக்கு நிதி உதவி அளித்து கவுரவித்தோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Police Commissioner ,West Bengal , Police Commissioner's heart touching music amidst West Bengal political arena: Violinist summoned and honored
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...