வங்கிக் கடன் மோசடி வழக்கில் 3 பாலிவுட் நடிகர்களின் சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

அகமதாபாத்: வங்கிக் கடன் மோசடி வழக்கில் மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலின் மருமகன் இர்பான் சித்திகி, நடிகர்கள் டினோ மோரியா, சஞ்சய் கான், டி.ஜே.அகீல் ஆகியோரின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்தின் இயக்குநர்கள் நிதின் ஜெயந்திலால் சந்தேசரா, சேட்டன்குமார் ஜெயந்திலால் சந்தேசரா மற்றும் தீப்தி சந்தேசரா ஆகியோர் ரூ.14,500 கோடிக்கு வங்கி கடன் மோசடி செய்ததாக எழுந்த புகார் குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், அமலாக்க இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ரூ .16,000 கோடி ஸ்டெர்லிங் பயோடெக் கடன் மோசடி வழக்கில் குஜராத்தைச் சேர்ந்த தொழில் அதிபர்கள் சந்தேசரா சகோதரர்கள் சிக்கி உள்ளனர். இவர்களிடம் இருந்து  மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலின் மருமகன் இர்பான் சித்திகி, நடிகர்கள் டினோ மோரியா, டி.ஜே.அகீல், சஞ்சய் கான் ஆகியோருக்கு பணம் கைமாறி உள்ளது. அதன் தொடர்ச்சியாக சஞ்சய் கானின் ரூ. 3 கோடி சொத்து, இர்பான் சித்திகியின் ரூ.2.41 கோடி சொத்து,  டி.ஜே.அகீலின் ரூ.1.98 கோடி சொத்து, டினோ மோரியாவின் ரூ.1.4 கோடி சொத்து ஆகியன தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள ரூ. 16 ஆயிரம் கோடியில் இதுவரை ரூ. 14,521 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட வழக்கில் இதுவரை நான்கு குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். நிதின் சந்தேசரா, சேதன் சந்தேசரா, திப்தி சேதன் சந்தேசரா, ஹிடேஷ் படேல் ஆகியோர் தப்பியோடியவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தற்போது நைஜீரியாவில் இருப்பதாக கூறப்படுகிறது. எண்ணெய் கிணறுகள் மூலம் அங்கு தொழில் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் துணை இயக்குநர் பூர்ணா காம் சிங் மற்றும் உதவி இயக்குநர் புவனேஷ் குமார் உள்ளிட்டோர் பணியாற்றி வருகின்றனர். மேற்கண்ட இருவரும், நிதிமோசடி வழக்கில் தொடர்புடைய தனியார் நிறுவனத்தை வழக்கில் இருந்து விடுவிப்பதற்காக ரூ. 75 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. அதனால், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் சிபிஐயிடம் புகார் அளித்தது. அவர்கள் அளித்த ஆலோசனையின் பேரில் முன்பணமாக ரூ.5 லட்சத்தை லஞ்சமாக கொடுக்க சென்ற போது, துணை இயக்குநர் பூர்ணா காம் சிங், உதவி இயக்குநர் புவனேஷ் குமார் ஆகியோரை சிபிஐ பொறிவைத்து கைது செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>