×

50 நாளுக்கு முன் மாயமானவர் திருநங்கையாக திரும்பி வந்தார்: சேலத்தில் தாய் பரிதவிப்பு

சேலம்: சேலம் ஜாகீர்அம்மாப்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி உமாதேவி. இவர்களது மகன் நவீன்குமார் (20). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவி மற்றும் குழந்தையை விட்டு விட்டு, பிரகாஷ் சென்றுவிட்டார். இதன்பிறகு மகனே வாழ்க்கை என நினைத்துக்கொண்டு உமாதேவி, வீட்டு வேலைக்கு சென்று மகனை வளர்த்தார். 10ம் வகுப்பு வரை படித்துள்ள நவீன்குமார், அதன் பிறகு பள்ளிக்கு செல்லவில்லை. இந்நிலையில் கடந்த 50 நாட்களுக்கு முன், வீட்டிலிருந்த நவீன்குமார் திடீரென மாயமானார்.

பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து உமாதேவி, சூரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். நவீன்குமாரிடம் இருந்த செல்போன் டவரை வைத்து விசாரித்ததில், அவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார், நேற்று பெங்களூரு விரைந்து சென்றனர். அங்கு நவீன்குமார் திருநங்கைகளுடன் இருப்பது தெரியவந்தது. போலீசாரை கண்டதும் நவீன்குமாரை, அவர்கள் வேறிடத்திற்கு மாற்றி விட்டனர்.

இதையடுத்து, திருநங்கைகளுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ‘‘நவீன்குமாரை அவரது தாயிடம் காண்பித்து விட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம், நீதிமன்றம் என்ன சொல்கிறதோ? அதன்படி நடந்து கொள்கிறோம்’’ என்றனர். நீண்டநேர பேச்சுவார்த்தைக்கு பிறகு, நவீன்குமாரை போலீசாரிடம் திருநங்கைகள் ஒப்படைத்தனர். அப்போது, நவீன்குமார் சுடிதார் அணிந்து கொண்டு அக்‌ஷிதாவாக வந்தார்.

அவர் திருங்கையாக மாறியது கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அவரை சேலம் அழைத்து வந்தனர். மகன் சேலம் வந்துவிட்டான் என்ற தகவல் கிடைத்ததும் அவரது தாய் உமாதேவி, போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடி வந்தார். அங்கு மகன் சுடிதார் அணிந்து கொண்டு, கம்மல், மூக்குத்தியுடன் இருந்த காட்சியை பார்த்ததும் கண்ணீர் விட்டு அழுதார். இருந்த போதிலும், நான் பெற்றெடுத்த மகன் எப்படி இருந்தாலும் சரி. என்னுடனேயே இருக்க வேண்டும் என்று போலீசாரிடம் கூறி அழுதார். ஆனால், நவீன்குமாரோ, ‘‘நான் திருநங்கையாகி விட்டேன், எனக்கு தாயுடன் வசிக்க விருப்பமில்லை. என்னை விட்டு விடுங்கள், நான் பெங்களூருக்கே சென்று விடுகிறேன்’’ என்று உறுதியாக கூறினார்.

இதையடுத்து நவீன்குமார்(எ)அக்‌ஷிதாவை, போலீசார் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றத்திலும் நவீன்குமார், நான் தாயுடன் செல்ல விரும்பவில்லை, திருநங்கையாக பெங்களூருவே செல்கிறேன்  என்றார். 20 வயதை கடந்து விட்டதால், நீதிமன்றம் நவீன்குமாரின் விருப்பத்தின் பேரில் செல்ல அனுமதி வழங்கியது. இறுதியில் அவரது தாயின் பாசப்போராட்டம் பரிதவிப்பில் முடிந்தது.


Tags : Salem , 50 days ago the magician returned as a transgender: Thai consolation in Salem
× RELATED இறைச்சி கடைகள் செயல்பட தடை