கோபா அமெரிக்கா கால்பந்து; சிலியை வீழ்த்தி அரையிறுதிக்கு பிரேசில் தகுதி: மற்றொரு ஆட்டத்தில் பெரு வெற்றி

ரியோ டி ஜெனிரோ: 10 அணிகள் பங்கேற்ற கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் பிரேசிலில் நடந்து வருகிறது. இதில் கால் இறுதி போட்டி இன்று அதிகாலை நடந்தது. கோயினியா நகரில் அதிகாலை 2.30 மணிக்கு நடந்த முதல் கால் இறுதி போட்டியில், பி பிரிவில் 2வது இடம் பிடித்த பெரு, ஏ பிரிவில் 3வது இடம் பிடித்த பராகுவே அணிகள் மோதின. 11, 54, 90வது நிமிடங்களில் பராகுவே கோல் அடித்தது. 21வது நிமிடத்தில் பராகுவே வீரர் அடித்த சுயகோல் மற்றும் 40, 80வது நிமிடத்தில் பெரு அணி கோல் போட்டது.

90 நிமிடங்கள் முடிவில் 3-3 என சமன் தொடர கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. அதிலும் கோல் அடிக்கப்படாததால் வெற்றியை தீர்மானிக்க பெனால்டிஷுட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது. இதில் பெரு 4, பராகுவே 3 கோல் அடித்தன. இதனால் பெரு வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. தொடர்ந்து ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்த 2வது கால் இறுதி போட்டியில் பிரேசில்- சிலி அணிகள் மோதின. ஈக்வடார் அணிக்கு எதிரான கடைசி லீக்போட்டியில் ஆடாத பிரேசில் கேப்டன் நெய்மர், தியாகோ சில்வா, ஆகியோர் இன்று களம் இறங்கினர்.

வலுவான பிரேசிலுக்கு ஈடுகொடுத்து ஆடிய சிலி வீரர்கள் கோல் முயற்சிகளை முறியடித்தனர். 2வது பாதியில் ஆட்டத்தின் 46வது நிமிடத்தில் பிர்மினோவுக்கு பதிலாக களம் இறக்கப்பட்ட லூகாஸ் பக்வெட்டா கோல் அடிக்க பிரேசில் முன்னிலை பெற்றது. 48வது நிமிடத்தில் பிரேசிலின் கேப்ரியல் ஜீசன், சிவப்பு அட்டை காண்பிடிக்கப்பட்டு வெளியேற்றப்பட 10 வீரர்களுடன் ஆட வேண்டிய நிலை ஏற்பட்டது. இருப்பினும் சிலி அணியால் கடைசி வரை கோல் அடிக்க முடியவில்லை. இதனால் 1-0 என்ற கோல் கணக்கில் வென்ற பிரேசில் அரையிறுதிக்குள் நுழைந்தது. அரையிறுதியில் பெருவுடன் மோதுகிறது.

Related Stories:

>