உத்தரகண்ட் மாநிலத்தின் புதிய முதல்வர் புஷ்கர் சிங் தாமி தேர்வு: டேராடூனில் நடைபெற்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் ஒருமனதாக தேர்வு

டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக புஷ்கர் சிங் தாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதல்வராக இருந்த தீரத் சிங் ராவத் ராஜினாமா செய்ததையடுத்து, டேராடூனில் பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் புதிய முதல்வராக புஷ்கர் சிங் தாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். உத்தரகண்ட் முதல்வராக இருந்த திரிவேந்திர சிங் ராவத் மீது கட்சி நிா்வாகிகள் புகாா் தெரிவித்ததால், அவரை கடந்த மாா்ச் மாதம் பதவி விலகச் செய்து, புதிய முதல்வராக பௌரி கா்வால் எம்.பி.யான தீரத் சிங் ராவத்தை பாஜக மேலிடம் நியமித்தது.

மேலும், சட்டப்பேரவை உறுப்பினராக அல்லாத ஒருவருக்கு அமைச்சா் பதவி கொடுக்கப்பட்டால், 6 மாதங்களுக்குள் சட்டப்பேரவை உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாக வேண்டும். அந்த வகையில், கடந்த மாா்ச் 10ம் தேதி முதல்வராகப் பதவியேற்றுக் கொண்ட தீரத் சிங் ராவத் அப்பதவியில் தொடர வேண்டுமானால் செப்டம்பா் 10ம் தேதிக்குள் சட்டப்பேரவை உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாக வேண்டும்.

நடப்பு சட்டப்பேரவையின் பதவிக் காலம், 2022ம் ஆண்டு மாா்ச் மாதம் முடிவுக்கு வருகிறது. பதவிக் காலம் ஓராண்டுக்கும் குறைவாக இருக்கும் நிலையில், தீரத் சிங் ராவத் போட்டியிட ஏதுவாக காலியாக இருக்கும் இடங்களுக்கு தோ்தல் ஆணையம் இடைத்தோ்தல் நடத்துவதற்கு வாய்ப்பு குறைவாகவே உள்ளது. அதுமட்டுமன்றி, கொரோனா தொற்று பரவல் காரணங்களால், மக்களின் உயிரைப் பணயம் வைத்து தோ்தல் நடத்த வேண்டுமா என்று தோ்தல் ஆணையத்தை நீதிமன்றங்கள் அண்மையில் கடுமையாக விமா்சித்தன.

பாஜக மேலிடம் அவசரமாக அழைப்பு விடுத்ததை அடுத்து தீரத் சிங் ராவத் தில்லிக்கு புதன்கிழமை சென்று மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா, பாஜக தலைவா் ஜெ.பி.நட்டா உள்ளிட்ட முக்கிய தலைவா்களைச் சந்தித்தாா். வெள்ளிக்கிழமை இரவு டேராடூன் திரும்பிய அவா், செய்தியாளா்களை சந்தித்தாா்.

அப்போது தனது ராஜினாமா குறித்து எதுவும் தெரிவிக்காத தீரத் சிங் ராவத், அதன்பிறகு ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளாா். இந்த நிலையில் இன்று டேராடூனில் பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் புதிய முதல்வராக புஷ்கர் சிங் தாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Related Stories:

>