பொள்ளாச்சி - போத்தனூர் இடையே அகல ரயில் பாதை மின்மயமாக்கும் பணி நிறைவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி வழியாக திண்டுக்கல் - போத்தனூர் ரயில்பாதை  திட்டத்தில் கடந்த 2009ம் ஆண்டு துவங்கப்பட்ட அகல ரயில்பாதை பணி, 8  ஆண்டுகளில்  நிறைவுபெற்றது. கடந்த 2015ம் ஆண்டு முதல் முதற்கட்டமாக  திருச்செந்தூர், சென்னைக்கும், அடுத்ததாக சென்னை,  பாலக்காடு, கோவை என  பல்வேறு பகுதிகளுக்கு  அடுத்தடுத்து ரயில் சேவை தொடர்ந்தது. இதற்கிடையே,  பொள்ளாச்சி வழியாக செல்லும் திண்டுக்கல், போத்தனூர் மற்றும் பாலக்காடு  வரையிலான அகல ரயில் பாதையை மின் மயமாக்கி ரயில் சேவையை மேலும் அதிகப்படுத்த  நடவடிக்கை எடுக்க  வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுந்தது.

  இதையடுத்து, திண்டுக்கல்- போத்தனூர் மற்றும் பாலக்காடு வரையிலான அகல  ரயில்பாதையை மின்மயமாக்கும் பணிக்காக சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு நிதி  ஒதுக்கப்பட்டது. ஒன்றரை  ஆண்டுகளுக்கு முன்பு, பொள்ளாச்சி ரயில்வே  ஸ்டேஷனிலிருந்து, கிணத்துக்கடவு வழியாக கோவை அருகே போத்தனூர் வரையிலான   ரயில்பாதையில் மின்மயமாக்குவது தொடர்பாக, நவீன கருவி கொண்டு அளவீடு பணி  நடைபெற்றது.

மேலும், நவீன கருவி மூலம் தண்டவாள வளைவு மற்றும் பாலம் பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து,    பொள்ளாச்சியிலிருந்து - போத்தனூர் வரை சுமார் 39 கி.மீ.  தூரத்திற்கிடையே மின்கம்பங்கள் அமைப்பதற்காக, ஆங்காங்கே கான்கிரீட் தளம்  அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்றது.  கொரோனா ஊரடங்கு காரணமாக, பொள்ளாச்சி -  போத்தனூருக்கிடையே  பயணிகள் ரயில் சேவை ஒரு ஆண்டுக்கு மேல்  நிறுத்தப்பட்டது. கடந்த சில மாதமாக, மின் மயமாக்குவதற்கான கம்பங்கள் அமைக்கும் பணி  இடைவிடாமல் நடைபெற்றது. அந்த மின் கம்பங்கள் சத்தீஷ்கர் மாநிலம் ராயப்பூரில் இருந்து கொண்டு வரப்பட்டவை. போத்தனூரிலிருந்து  கிணத்துக்கடவு வழியாக பொள்ளாச்சி வரை ஆங்காங்கே அமைக்கப்பட்ட கம்பத்தில்,  முறுக்கு மின் கம்பிகள் கட்டி,  மின்கம்பிகளை சீர்படுத்தும் பணி நிறைவு  பெற்றது.

போத்தனூரிலிருந்து பொள்ளாச்சி வரை உள்ள அகல ரயில்பாதையில்   மின்மயமாக்கல் பணி நிறைவடைந்த நிலையில், அடுத்தக்கட்டமாக  பொள்ளாச்சியிலிருந்து பாலக்காடு மற்றும் பழனி வழித்தடத்தில்  மின்மயமாக்கல்  பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.  தற்போதும், தளர்வுடன் ஊரடங்கு தொடர்வதால் பொள்ளாச்சியிலிருந்து திருச்செந்தூர், கோவை,  பாலக்காடுக்கு செல்லும் பயணிகள் ரயில் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டுள்ளது.  கொரோனா ஊரடங்கு முற்றிலும் நிறைவடைந்தவுடன்,  பொள்ளாச்சி வழியாக  பல்வேறு  இடங்களுக்கு ரயில்வே சேவை  துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.   இந்நிலையில்,  பொள்ளாச்சியிலிருந்து பழனி வரையிலும் மின்மயமாக்கல் பணியை விரைந்து நிறைவு  செய்தால்,  பொள்ளாச்சி வழியாக வெளி மாவட்டங்களுக்கு  கூடுதல் விரைவு   ரயில் சேவை இருக்கும் என  ரயில் பயணிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>