×

பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை மாநில அரசுகளே இறுதி செய்யும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய முடிவு : ஒன்றிய அரசு நடவடிக்கை

டெல்லி : பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் எந்தெந்த சமூகத்தினரை சேர்க்கலாம் என்று முடிவு எடுக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு இருப்பதை உறுதி செய்யும் வகையில் அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. மராத்த சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கடந்த மே மாதம் ரத்து செய்த உச்சநீதிமன்றம், ஒரு சமூகத்தின் பிற்படுத்தப்பட்டோர் தன்மையை தீர்மானிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை. மத்திய அரசுகளுக்கு தான் அதிகாரம் உள்ளது என்று தீர்பளித்தது. தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியல் அமைப்புச் சட்ட அங்கீகாரம் அளிப்பதற்காக 2018ம் ஆண்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 102வது திருத்தத்தையும் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

இதற்கு தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை தயாரிக்கும் உரிமை மாநில அரசுகளிடம் இருப்பதே ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில், தீர்ப்பை எதிர்த்து ஒன்றிய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இது குறித்து கருத்து தெரிவித்துளாள் ஒன்றிய சமூக நீதித்துறை அமைச்சர் தாவர் சண்ட் கெலாட், அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு மாநிலங்களின் உரிமைகள் காக்கப்படும் என்றார். அதன்படி பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் குறிப்பிட்ட சமூகத்தினரை சேர்ப்பது தொடர்பான முந்தைய வழிமுறைகள் காப்பாற்றப்படும் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.

இதன்மூலம் மாநில அளவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் எந்த ஜாதியை சேர்ப்பது என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட மாநில அரசிடமே இருக்கும் என்பது உறுதிப்படுத்தப்படும். இது தொடர்பாக ஒன்றிய சட்ட அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் விரைவில் அரசியல் அமைப்பில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என்றும் தாவர் சந்த் கெலாட் தெரிவித்துள்ளார்.

Tags : State Governments , தாவர் சந்த் கெலாட் .
× RELATED தமிழக மீனவர்களின் சிக்கலுக்கு...