×

தெற்குராஜன் வாய்க்காலில் கான்கிரீட் தடுப்புசுவர் அமைக்கும் பணி மும்முரம்

கொள்ளிடம்: கொள்ளிடம் பகுதியில் தெற்கு ராஜன் வாய்க்காலில் கான்கிரீட் சுவர் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் மிகவும் முக்கியமான பாசன வாய்க்காலாக தெற்கு ராஜன் வாய்க்கால் இருந்து வருகிறது. இந்த வாய்க்காலில் இருந்து நூற்றுக்கணக்கான கிளை வாய்க்கால்கள் பிரிந்து சென்று கொள்ளிடம் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களுக்கு பாசன வசதி செய்து தருகிறது. இந்த வாய்க்காலில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்துக்கு இரண்டு கரையை ஒட்டி கான்கிரீட் தடுப்புசுவர் அமைத்து தரைப் பகுதியிலும் கான்கிரீட் சிமென்ட் தளம் அமைக்கும் பணி கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்று வருகிறது. இப்படி இரண்டு புறங்களிலும் கான்கிரீட் சுவர் கட்டப்படுவதால் கரையை ஒட்டி வரும் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் மற்றும் சிறுவர்கள் மழைக்காலத்தில் தவறி விழுந்து விட்டால் அவர்கள் மீண்டும் கரையை அடைவது அரிதான ஒன்றாகிவிடும்.

மேலும் அப்பகுதியில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த கால்நடைகள் வாய்க்காலில் இறங்கி தண்ணீர் அருந்துவதற்கு எந்த வழியோ, வசதி வாய்ப்பும் இல்லாமல் வாய்க்காலின் இருபுறங்களிலும் கான்கிரீட் சுவர் அமைக்கப்படுவதால் ஆடு மற்றும் மாடுகள் தண்ணீருக்குள் இறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி தவறி தண்ணீர் குடிப்பதற்கு இறங்கி விட்டால் மீண்டும் கரையை அடைய முடியாத நிலை உள்ளது.

எனவே தற்போது தெற்கு ராஜன் வாய்க்காலை ஒட்டி இரண்டு புறங்களிலும் கான்கிரீட் சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வந்தாலும் ஆங்காங்கே கால்நடைகள் இறங்கித் தண்ணீர் அருந்துவதற்கு வாய்ப்பாக வழிவகை செய்து தரவேண்டும் என்று தெற்கு ராஜன் வாய்க்கால் ஒட்டியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் நஞ்சை மற்றும் புஞ்சை விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் வில்வநாதன் தெரிவித்தார்.

Tags : South Kurajan Canal , therKurajan drain, concrete retaining wall
× RELATED தெற்குராஜன் வாய்க்காலில் தண்ணீர்...