×

குற்றால அருவிக்கரையில் பராமரிப்பின்றி பாழடைந்து கிடக்கும் பேரூராட்சி விடுதிகள்: சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

தென்காசி: குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கட்டப்பட்ட பேரூராட்சி விடுதிகள் பராமரிப்பின்றி பாழடைந்து கிடக்கிறது. விரைவில் இவற்றை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் விரும்புகின்றனர். சுற்றுலாத் தலமான குற்றாலத்திற்கு ஆண்டுதோறும் 60 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். அவர்கள் குடும்பத்துடன் தங்குவதற்கு தனியார் விடுதிகளை தேடி அலையும் சூழல் இருந்தது. மேலும் அன்றைய காலகட்டத்தில் தனியார் விடுதிகளும் மிக குறைந்த அளவிலான எண்ணிக்கையில் இருந்ததால் குற்றாலத்தில் சில நாட்கள் தங்கியிருந்து சீசனை அனுபவிக்க முடியாத நிலை இருந்தது. முதன்முதலாக 1968ல் கருணாநிதி பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது, குற்றாலம் நகரியத்தின் சார்பில் தென்காசி சாலையில் 23 அறைகள், 12 குடில்கள் கட்டப்பட்டன.

தொடர்ந்து 1984, 1994ம் ஆண்டுகளில் மல்லிகை, ரோஜா உள்ளிட்ட விடுதிகள் கட்டப்பட்டன. தற்போதைய நிலையில் குற்றாலம் மெயினருவி அருகில் 38 காட்டேஜ்களும், மல்லிகை விடுதியில் 20 அறைகளும், ரோஜா விடுதியில் 24 அறைகளும், தென்காசி சாலை தங்கும் விடுதியில் 23 அறைகளும், 12 காட்டேஜ்களும், செங்கோட்டை சாலை தங்கும் விடுதியில் 37 அறைகளும், 4 மீட்டிங் கால்களும் என மொத்தம் 154 அறைகளும் 4 கூட்டு அரங்குகளும் உள்ளன. இவை கடந்த பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி பாழடைந்து கிடப்பதுடன், இவற்றிலிருந்து வருமானமும் இல்லாத நிலை உள்ளது. மெயினருவி தங்கும் விடுதிகளில் 10 அறைகள் மட்டுமே நல்ல நிலையில் உள்ளன. அவையும் அரசு அதிகாரிகளின் ஆக்கிரமிப்பில் உள்ளன. தென்காசி சாலை தங்கும் விடுதி, மல்லிகை இல்லம் ஆகியவை காவல்துறை பட்டாலியன் கைவசம் உள்ளது.

செங்கோட்டை சாலை தங்கும் விடுதியில் 37 அறைகளும், 4 கூட்ட அரங்குகளும் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. 154 அறைகளில் 120க்கும் மேற்பட்டவை பயன்படுத்த முடியாத அளவிற்கு கதவுகள் உடைந்தும், கட்டில்கள் இல்லாமலும், தண்ணீர் வசதியின்றி பாழடைந்தும் கிடக்கிறது. 17 அறைகளை மட்டுமே ைவத்துள்ள, சுற்றுலாத்துறைக்கு சொந்தமான தமிழ்நாடு ஓட்டல் ஆண்டுக்கு ரூ.40 லட்சம் வருமானம் ஈட்டும் நிலையில், 154 அறைகளை வைத்துள்ள பேரூராட்சி நிர்வாகம் ஒரு சில ஆயிரங்கள் கூட வருவாய் ஈட்ட முடியாத சூழல் உள்ளது. கடந்த ஆண்டுகளில் இதனை சீரமைப்பதற்காக பேரூராட்சி சார்பில் அனுப்பிய திட்ட முன்வடிவு அனைத்தும் கிடப்பில் உள்ளது. இதேநிலை நீடித்தால் கட்டிடங்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு விடும். எனவே பேரூராட்சி நிர்வாகம் விடுதிகளை சீரமைப்பதன் அவசியம் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் விரும்புகின்றனர்.

Tags : Courtallam Falls , Municipal hotels dilapidated without maintenance at Courtallam Falls: Will action be taken to renovate?
× RELATED 8 மாதங்களுக்கு பின்னர் இன்று முதல்...