×

அரசியல் நெருக்கடி காரணமாக பதவி விலகிய உத்தராகண்ட் முதல்வர் : 100 நாட்களுக்குள் 3வது முதல்வரை தேர்வு செய்யும் பாஜக!!

டேராடூன் : உத்தராகண்ட் மாநிலத்தின் முதல்வர் தீரத் சிங் ராவத் அரசியல் நெருக்கடி காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பாஜக ஆளும் உத்தராகண்ட் மாநிலத்தில் முதல்வராக இருந்த திரிவேந்திர சிங் ராவத் மீது அக்கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்தனர். இதையடுத்து திரிவேந்திர சிங் ராவத் பதவி விலகிய நிலையில், புதிய முதல்வராக கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி தீரத் சிங் ராவத் நியமிக்கப்பட்டார். அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அவர், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு முதல்வராக பதவியேற்றார்.இந்த நிலையில் அவர் செப்டம்பர் 10ம் தேதிக்குள் ஏதாவது ஒரு சட்டபேரவை தொகுதியில் வெற்றி பெற்று உறுப்பினராக வேண்டும்.

இல்லையென்றால் முதல்வர் பதவியில் தொடர முடியாது.கொரோனா பெருந்தொற்று காரணமாக இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்துமா என்ற கேள்வி எழுந்தது. ஒரு வேளை தேர்தலை நடத்த முடியாமல் போனால் தீரத் சிங் ராவத் பதவியில் தொடருவதில் சிக்கல் ஏற்பட்டது. இதே போல் அவருக்கு எதிராக கட்சிக்குள்ளேயும் அதிருப்திகள் எழுந்தன. இதனையடுத்து டெல்லியில் கடந்த 3 நாட்களாக தங்கி இருந்த தீரத் சிங் ராவத் மாநிலத்தில் நிலவும் அரசியல் குழப்பங்கள் தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களை சந்தித்து பேசினார். இறுதியில் அவரை பதவி விலகுமாறு பாஜக தலைவர்கள் அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், நேற்று இரவு உத்தராகண்ட் ஆளுநர் தேவி ராணி மவுரியாவைச் சந்தித்த தீரத் சிங் ராவத் தனது பதவி விலகல் கடிதத்தை அளித்தார். உத்தராகண்ட் மாநில பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று கூடி புதிய முதல்வரை தேர்வு செய்ய உள்ளனர். அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த 100 நாட்களுக்குள் 3வது புதிய முதல்வரை பாஜக தேர்வு செய்ய உள்ளது.முதல்வர் பதவியில் இருந்து விலகிய தீரத் சிங் ராவத்திற்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags : Uttarakhand ,Chief Minister ,BJP , முதல்வர் தீரத் சிங் ராவத்
× RELATED லக்னோ மக்களவைத் தொகுதியில்...