திருப்பத்தூர் நகராட்சி 26வது வார்டில் காலி குடங்களுடன் குடிநீர் கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் நகராட்சியில் 10 ஆண்டுகளாக குடிநீரின்றி தவிக்கும் 26வது வார்டு பொதுமக்கள் காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் நகராட்சியில்  36 வார்டுகள் உள்ளது. அதில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவ்வாறு வசிக்கும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான  கால்வாய், குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் நகராட்சியின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மக்களின் குடிநீர் பிரச்னையை போக்க கடந்த திமுக ஆட்சியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டு, பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் கூடுதலாக தென்பெண்ணை ஆற்றில் இருந்தும் தண்ணீர் கொண்டுவரப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

திருப்பத்தூர் நகராட்சி பகுதிகளில், நகராட்சிகளில் பணிபுரியும் ஊழியர்கள் நிர்வாகத்திற்கு தெரிவிக்காமல் முறைகேடாக குடிநீர் இணைப்புகள் வழங்கியுள்ளனர். இந்தநிலையில் மேடான பகுதியான காந்தி நகர் 26வது வார்டு பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். மேலும், கடந்த 10 ஆண்டுகளாக அப்பகுதியினருக்கு நகராட்சி ஊழியர்கள் தண்ணீர் வழங்காமல் உள்ளனர். இதனால் அவர்கள் நீண்ட தொலைவிற்கு சென்று தங்களது குடும்பத்திற்கு தேவையான குடிநீரை கொண்டு வந்து உயயோகித்து வருவதால், பெரும் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து கடந்த 10 ஆண்டுகளாக 26வது வார்டு பகுதியினர் நகராட்சி நிர்வாகத்திற்கு 30க்கும் மேற்பட்ட மனுக்கள் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதியினர் 20க்கும் மேற்பட்டோர் நேற்று காலை காலி குடங்களுடன் சமூக இடைவெளி கடைப்பிடித்து தெருக்களில் 30 நிமிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், ‘எங்கள் பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடந்த 10 ஆண்டுகளாக குடிநீரின்றி பெரும் அவதிக்குள்ளாகியுள்ளோம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மனுக்கள் கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மேலும், குடிநீருக்காக நீண்ட தூரத்தில் இருந்தும், பணம் கொடுத்து டிராக்டரில் கொண்டுவருவதால் பெரும் அவதிக்குள்ளாகின்றோம். எனவே உடனடியாக கலெக்டர் இந்த பகுதியை ஆய்வு செய்து எங்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகத்தினர் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சாலை மறியலில் ஈடுபட உள்ளோம்’ என தெரிவித்தனர்.

Related Stories:

>