ஜெயலலிதா நினைவிடம் சென்ற பின்னர் 9ம் தேதி சசிகலா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்?....தொண்டர்களை சந்திக்க முடிவு

சென்னை: பெங்களூரில் இருந்து சென்னை திரும்பிய சசிகலா கடந்த சட்டமன்ற தேர்தலின்போது அரசியலில் இருந்து விலகினார். இந்தநிலையில், கடந்த மாதம் அவர் தனது ஆதரவாளர் ஒருவருடன் தொலைபேசி மூலம் பேசிய ஆடியோ வெளியானது. அதில், தான் மீண்டும் அரசியலுக்கு வருவதாகவும், அதிமுக இப்படி வீணாகிப்போவதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது எனவும் கூறினார்.  இந்த ஆடியோ அதிமுக தலைமைக்கு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால், காஞ்சிபுரம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் சசிகலாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினர். இதேபோல், ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டத்திலும் சசிகலாவிற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் இயற்றப்பட்டது.

ஆனால், தொடர்ந்து சசிகலா ஆடியோ அரசியலை நடத்தி வருகிறார். அனைத்து மாவட்ட மூத்த நிர்வாகிகளுடனும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார். அந்த வகையில், அமமுக செய்தி தொடர்பாளர் தாம்பரம் நாராயணன் சசிகலாவிற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கடிதம் அனுப்பியிருந்தார். இதனையடுத்து, சசிகலா,  தாம்பரம் நாராயணனை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, ஊரடங்கு முடிந்தவுடன் நேரில் வந்து சந்திப்பதாக உறுதி அளித்துள்ளார்.

சசிகலாவுடன், தாம்பரம் நாராயணன் செல்போனில் பேசிய உரையாடல் :

சசிகலா: நாராயணன் உங்கள் கடிதம் வந்ததை பார்த்தேன். எல்லா பிள்ளைகளும் எனக்கு ஒன்று தான், அதில் எந்தவித வித்தியாசமும் கிடையாது. ஜெயலலிதா தொண்டர்கள் நான்கு வருடங்களாக தொடர்ந்து எனக்கு கடிதம் எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள். தற்போது கொரோனா காலம் என்பதால் பதில் கடிதம் அனுப்பினால், அது சென்று சேருமோ, சேராதோ என்ற சந்தேகத்தால் பதில் கடிதம் எழுத முடியாத ஒரு நிலை. தேர்தல் தோல்விக்கு பிறகு, தொண்டர்கள் எழுதிய கடிதங்களை படித்து எனக்கு மனசு ரொம்ப கஷ்டமாக இருந்தது. அதனால் தான் எல்லாரிடமும் பேசி வருகிறேன்.  லாக் டவுன் 5ம் தேதி வரை என சொல்லியிருக்கிறார்கள். பிற மாவட்டங்களுக்கு தளர்வுகள் எப்படி வருகிறது என்று பார்த்து விட்டு, முதலில் அம்மாவை சென்று பார்த்துவிட்டு, அதன் பின்னர் அனைவரையும் வந்து சந்திப்பேன். நிச்சயம் அனைவரையும் வந்து பார்ப்பேன்.

தாம்பரம் நாராயணன் : நாங்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறோம்.

சசிகலா : நான் கட்டாயம் வந்து விடுவேன்.

இது குறித்து, அமமுக தொண்டர் ஒருவர் கூறுகையில், ‘ஜூலை 5ம் தேதி ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டபின் 7ம் தேதி ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மரியாதை செலுத்திவிட்டு, 9 ம்தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், தொண்டர்கள் அனைவரும் அவரது வருகையை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறோம்’ என தெரிவித்தார்.

Related Stories:

>