×

10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் பராமரிப்பின்றி கிடந்த வள்ளுவர் கோட்டம் பிரமாண்டமாக புனரமைப்பு: நூலகம், ஆய்வரங்கம் அமைகிறது; அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சென்னை: தமிழகத்தில், திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில் வள்ளுவர் கோட்டத்தை புனரமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இது தொடர்பாக நேற்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவாரூர் தேர், பொது அரங்கம், மேல்தளங்களை பார்வையிட்டனர். இந்த ஆய்வின்போது, பராமரிப்பின்றி காணப்படும் வள்ளுவர் கோட்டத்தை சீரமைப்பது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழர்களின் அடையாளச் சின்னமாக விளங்கும் வள்ளுவர் கோட்டம் 1974ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி முன்னாள் முதல்வர் கலைஞரால் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது. 40 ஆண்டுகள் முடிந்த நிலையில் தமிழனின் பண்பாட்டு அடையாளமாக திகழும் வள்ளுவர் கோட்டத்தை கடந்த 10 ஆண்டுகளாக பராமரிக்காமல் விட்டுவிட்டனர். 3500 பேர் அமரக்கூடிய மிகப் பெரிய அரங்கத்தை கூட பராமரிக்காமல் தரைதளம், மேல்தளம், படிக்கட்டுகள் அனைத்தும் உடைந்து சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. பளிங்குக் கல்லில் பதிக்கப்பட்ட அனைத்து திருக்குறளும் படிக்க முடியாத நிலையில் சேதமடைந்துள்ளது. அடிப்படை வசதிகள், மின்வசதி, கழிவறை மற்றும் தண்ணீர் வசதி, வர்ணம் பூசுதல் மற்றும் பூங்காவை மேம்படுத்துதல் ஆகிய பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து புனரமைப்பு செய்ய மதிப்பீடு தயார் செய்யுமாறு உத்திரவிட்டுள்ளேன்.

இங்குள்ள அரங்கம் புதுப்பிக்கப்படும் போது நூலகம் மற்றும் ஆய்வரங்கம் தனியாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு புதுப்பிக்கப்படும் கூட்ட அரங்கு பொது நிகழ்ச்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கப்படும். இதுகுறித்த ஆய்வறிக்கை விரைவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று அனுமதி பெற்று வள்ளுவர் கோட்டம் மீண்டும் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிமுகவினருக்கு வள்ளுவரை பிடிப்பதில்லை
அதிமுகவுக்கு வள்ளுவர் என்றாலே  பிடிப்பதில்லை. திருவள்ளுவரை திமுக உறுப்பினர் என நினைத்துக்கொண்டு  தொடர்ந்து புறக்கணித்தனர். மாணவர்களின் நலனுக்காக சமச்சீர் கல்வி கொண்டு  வந்தபொழுது பாடப்புத்தகத்திலிருந்த திருவள்ளுவரின் படத்தை கூட எடுத்து  விட்டனர். சாதி பேதமற்ற, மத சார்பற்ற ஒரு பொதுவான மனிதர் தான்  திருவள்ளுவர். இன்று உலகமே இவருடைய திருக்குறளை பல மொழிகளில் மாற்றம்  செய்து பயன்படுத்தி பாராட்டிக் கொண்டுள்ளனர் என்று அமைச்சர் எ.வ.ேவலு கூறினார்.


Tags : Valluvar Kottam ,AIADMK ,Minister ,E.V.Velu , AIADMK Government, Valluvar Kottam, Reconstruction, Library, Minister E.V.Velu
× RELATED டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை கைது செய்த...