அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரி தளர்வுகள் அமல் ஓட்டல்களில் உட்கார்ந்து சாப்பிட அனுமதி

* இ-பாஸ், இ-பதிவு முறை ரத்து

* கடைகளை இரவு 8 மணி வரை திறக்கலாம்

* 11 மாவட்டங்களிலும்

பஸ்களை இயக்க அனுமதி

* மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்ன: தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான தளர்வுகள் அமல்படுத்தப்படும். ஓட்டல்களில் 50 சதவீதம் பேர் உட்கார்ந்து சாப்பிட அனுமதிக்கப்படும், கடைகள் இரவு 8 மணி வரை திறந்திருக்க அனுமதி, இ-பதிவு, இ-பாஸ் முறை ரத்து, தங்கும் விடுதிகளில் தங்க அனுமதி உள்ளிட்ட பல்வேறு தளர்வுகள் வழங்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் தலைமைச் செயலாளர் இறையன்பு, செயலாளர்கள் முருகானந்தம், கிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், டிஜிபி சைலேந்திரபாபு, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:

தமிழ்நாட்டில் ஊரடங்கு 5.7.2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடைகிறது. அனைத்து மாவட்டங்களிலும் கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு 5.7.2021 முதல் 12.7.2021 காலை 6 மணி வரை தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது. அதன்படி, மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து, மத்திய  உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்து, திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள், பொது மக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள்,  பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், உயிரியல் பூங்காக்கள் ஆகியவற்றிற்கு தடை நீட்டிக்கப்படுகிறது. திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இறுதிச் சடங்குகளில், 20 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

 5.7.2021 முதல், அனைத்து மாவட்டங்களிலும் ஒரே வகையான தளர்வுகள் வழங்கப்படுகிறது. ஏற்கனவே இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் செயல்பாடுகள், இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். மேலும், கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளும் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படும். அதன்படி,

* அரசு, மற்றும் தனியார் தொழில் சார்ந்த பொருட்காட்சி நிகழ்வுகள் நடத்த அனுமதிக்கப்படும்.

* உணவகங்கள், விடுதிகள், அடுமணைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் உள்ள உணவகங்களில் காலை 6 மணி முதல் மாலை 8 மணி வரை, உரிய காற்றோட்ட வசதியுடன், நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த வேண்டும்.

* தேநீர் கடைகளில் நிலையான வழிகாட்டுமுறைகளை பின்பற்றி ஒரே நேரத்தில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் தேநீர் அருந்த அனுமதி.

* கேளிக்கை விடுதிகள், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டுக்கள் மற்றும் உணவகங்கள் மட்டும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி செயல்பட வேண்டும்.

* தகவல் தொழில்நுட்பம் / தகவல் தொழில் நுட்ப சேவை நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கும்.

* அருங்காட்சியகங்கள், தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ் வைப்பகங்கள் காலை 10  மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம்.  

* உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் உரிய காற்றோட்ட வசதியுடன், ஒரு நோத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் மட்டும் செயல்பட வேண்டும்.

* அனைத்து வழிபாட்டுத் தலங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்படும். திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு நடத்த அனுமதி இல்லை.

* அனைத்து துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள், உரிய காற்றோட்ட வசதியுடன், ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம்.  

* வணிக வளாகங்கள் காலை 9 மணி முதல் மாலை 8 மணி வரை செயல்படும். வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும். வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் மற்றும் விளையாட்டுக் கூடங்களுக்கு அனுமதி இல்லை.

*  மாவட்டத்திற்குள்ளேயும், மாவட்டங்களுக்கிடையேயும், பொது பேருந்து போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமல் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

*  எஸ்.ஆர்.எப்/ஜெ.ஆர்.எப், எம்.பில், பி.எச்டி ஆராய்ச்சி மாணவர்கள் தங்கள் கல்வி சார்ந்த பணிகளை தொடர்புடைய கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.  இவர்களின் கல்வி சார்ந்த பணிகளுக்காக கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் செயல்படும்.

* அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம், எஸ்ஐஆர்டி போன்ற அரசு பயிற்சி நிலையங்கள்/மையங்கள், உரிய காற்றோட்ட வசதியுடன், 50 சதவீத பயிற்சியாளர்கள் மட்டும் பங்கேற்கும் வகையில், செயல்பட அனுமதி.

* பொழுதுபோக்கு / கேளிக்கை பூங்காக்களில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு அனுமதி. முகக் கவசம் அணிதல், கிருமி நாசனி பயன்படுத்துதல் ஆகியவை நிர்வாகத்தால் முறையாக கடைபிடிக்க வேண்டும். இந்த பூங்காக்களில், திறந்த வெளியில் நடத்தப்படும் விளையாட்டுக்கள் மட்டும் அனுமதிக்கப்படும். தண்ணீர் தொடர்பான விளையாட்டுகளுக்கு அனுமதி இல்லை.

* மாவட்டங்களுக்கிடையே பயணிக்க இ-பாஸ்/இ-பதிவு நடைமுறை ரத்து செய்யப்படுகிறது.

பொது:

அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கடைகள் மற்றும் பொது மக்கள் கூடக்கூடிய இடங்களில் கீழ்க்கண்ட முக்கிய நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். அதன்படி, கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும். கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

 பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும். நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன் அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை/ சிகிச்சை பெற வேண்டும். கொரோனா நோய்த் தொற்று மேலாண்மைக்கான விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவது கண்காணிக்கப்பட்டு, விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் நடவடிக்கைகள் தொடரும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

* தங்கும் விடுதிகள், உறைவிடங்கள், விருந்தினர் இல்லங்கள் செயல்பட அனுமதி. அங்குள்ள உணவு விடுதிகள் மற்றும் தங்குமிடங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

* டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 8 மணி வரை செயல்பட அனுமதி.

Related Stories:

>